பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நன்றிகொன்ற சூரபத்மாதியர்களை நெறிப்படுத்திய செந்நெறி வரலாற்றைப் புலப்படுத்துவது.

தமிழ்க்காப்பியப் புராணம்:

இம்முப்புராணங்களுள், திருவிளையாடற் புராணமும், கந்த புராணமும் வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பெற்றவை. பெரியபுராணமோ சேக்கிழார் பெருமானால் தில்லை அம்பலக்கூத்தன் திருவருளால் 'உலகெல்லாம்’ என அடிஎடுத்துக்கொடுக்க தமிழிலே எழுந்த காப்பியப் புராணமாகும். மேலும் பெரியபுராணம் அகத்திய பக்த விலாசம் என்றும், உபமன்ய பக்த விலாசம் என்றும் வடமொழியில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ள சிறப்பினவாகும்.

புராணப்பொருள்:

புராணம் என்றால் பழைய வரலாறு என்பது பொருளாகும். சிவபெருமானுக்கே புராணர் என்ற பெயரும் உண்டு, "அகனமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி, ஞானம்புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத்துள்ளுறையும் புராணர்கோயில்” என்னும் ஞானசம்பந்தப்பெருமான் அருளிய திருவீழிமிழலைத் தேவாரத்தால் இதைத் தெளிய உணரலாம்.

மேலும் புராணம் என்பது புராதனம் என்பதன் திரிபே என்பர். இன்றைய செய்தியே நாளைய வரலாறு என்பது இற்றைநாள் வழக்கு. இதைப்போலவே முந்திய செய்தியே பிந்திய வரலாறு என்பதும் கொள்ளத்தக்கதே. புராணம் என்பதை புரா - நவம் எனப் பிரிப்பர். புரா என்பது புராதனம் என்பதில் முதல் சொல்லாகிய பழைமையைக் குறிப்பது. நவம் என்பது புதுமையைக் குறிப்பது. பழைமை க்குப் பழைமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் இருப்பவனே புராணன் என்ற சொல்லின் புனிதப்பொருள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். பூரணம் - நிறைவு, பூரணன் என்ற