பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்ணப்ப நாயனார் வரலாறு உணர்த்துகின்றது. ஆனாலும் நாட்டில் நிகழ்ந்தது என்ன ? நடப்பது என்ன? சிவகோசரியார் பரம்பரை வருகிறது. கண்ணப்பர் பரம்பரை வரவில்லையே. கண்ணப்பரின் புகழ் கண்டு ஒளித்த சிவகோசரியார் பரம்பரை, அடுத்துக் கண்ணப்பர் தோன்ற முடியாமல் கருவறையைப் பூட்டிவிட்டதே வழிபடும் உரிமையைப் பறித்துவிட்டதே! புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்யும் ஞானப் பயிற்சியில்லாமல் எப்படி அன்பு வளரும்? ஞானம் வளரும்? திருஞான சம்பந்தர் முதலாகச் சமய ஆசாரியர்கள் வழங்கிய உரிமையைத் தட்டிப் பறித்துவிட்டனரே! ஆன்மாவின் ஞானப் பண்ணையாக விளங்கிய திருக்கோயிலைக் காட்சிச் சாலையாக-தொழிற் கூடமாக-மடைப் பள்ளியாக மாற்றிய கொடுமையை நினைத்தால் நெஞ்சு பொறுக்க வில்லையே! பக்தர்கள் ஆவார் எல்லாரும் திருக்கோயிலில் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்யும் உரிமையைப் பெறும் நாளே-நன்னாள். தூய அன்பினால் இறைவனை வழிபடுதலே வழிபாடு. தூய அன்பினால் இணைந்து ஒருமைப்பாட்டுடன் வாழ்வதே வாழ்வு.

பெரியபுராணத்தில், சமுதாய அமைப்பில் பல்வேறு நிலைகளைக் காட்டும் அன்புநெறி பேசப் பெறுகிறது. ஆயினும், நூல் முழுவதும் மையமிட்டுக் கொண்டிருப்பது சிவனடியார்பால் காட்டும் அன்பேயாம். சிவத்தைப் பேணுவதாலும், சிவத்தைத் தம் நெஞ்சத்திற் கோயில் கொண்டருளச் செய்திருப்பதாலும், சிவத்தின் திருவேடத்தையே தம் திருவேடமாகக் கொண்டிருப்பதாலும், சிவனடியார்கள் அன்பு பாராட்டுதற்குரியவர்கள். சிவனடி யார்கள் 'யான்', 'எனது' என்னும் செருக்கற்வர்களாகச் சிவத்தையே நினைந்து தொழும் பழமை பூண்டவர்கள். இத்தகு சிவனடியார்கள்பால் அன்பு காட்டுதல் தமிழகத்தின் வழக்கு ஒரோவழி இவ்வழிபாட்டினைப் பெற்றார்.