பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

167


பிழையுளராக இருந்தும், வழிபாட்டினைச் செய்தார், பெற்ற பேற்றினையே பெற்றிருக்கிறார்கள். காரணம், வழிபாடு, வேடத்தினைத் தாங்கியிருந்த மனிதருக்கன்று. அவர் மூலம் சிவத்தின் திருவேடத்திற்கே வழிபாடு நிகழ்த்தப் பெற்றது. நினைப்பும்-மறப்பும் சேர்ந்தது உயிரியல் வாழ்க்கை உலகியல் வாழ்க்கையில் சிவத்தை மறக்கும் வாயில்களே மிகுதி. அப்போது சிவத்தின் நினைவைத் தரும் திருவேடமும் திருக்கோயிலும் போற்றுதலுக்கு உரியனவான நினைப்பிக்கும் பணியினை எது செய்தாலென்ன? அதனாலன்றோ சேரமான் பெருமான்,

................தீருநீற்றின்
வாரவேடம் நினைப்பித்தீர் வருந்தாதேகும்”


என்று நினைப்பிக்கும் பணியின் பெருமையை விளக்குகின்றார்.

அன்பு, பகைக்கு மாறானது. எப்போது? பகையை இலட்சியமாகக் கொள்ளாத போது, அதிசூரன்-முத்த நாதன்களுக்குப் பகைமைக் குணம் மாறததுபோல இன்றும் பலர் வாழ்நாள் முழுவதும் பகைவர்களாகவே வாழ்கின்றார்கள். அவர்கள் வாழ்க்கை அவலத்தில்தான்் முடியும். இதனால் யாருக்கென்ன பயன்? பகைமைக் குணம் ஒருபொழுதும் பயன் தராது. ஒரோவழி பயன் கிடைப்பது போலத் தோன்றும்; அஃது ஒரு வாணவேடிக்கை. வாணம் வெடித்தபின் கரியே; அதுபோல்-பகைமை செறிந்த வாழ்க்கை துன்பமே தரும்; பயனைத் தராது. ஏனாதிநாதர், ஈழவர் குலத்தைச் சார்ந்தவர். அவருடைய தாயத்தில் உரிமை கொண்டாடி அதிசூரன் என்பவன் போரிடுகின்றான். பலமுறை போரில் தோல்வியடைகிறான். அதிசூரன் தான் அடைந்த தோல்வியின் காரணமாக வஞ்சகச் சூழ்ச்சியை எண்ணுகிறான். தனி இடத்துக்குப் போருக்கு வருமாறு ஏனாதிநாதரை அழைக்கின்றான். ஏனாதிநாதரோ நல்லவர்.