பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

169


கொன்று தாயம் கொண்ட பழி சேரும்! அது சிவவேடம் கொண்டாருக்குப் புகழாகாது என்றெண்ணிப் போர் செய்வார்போல் நடித்துத் தம்மையே மரணத்திற்குள்ளாக்கிக் கொண்டு அதிசூரனுக்குத் தாயம் மட்டுமல்லாமல் தாவில் புகழும் சேர்த்தார். கொடிய பகைவரிடத்தும் ஒரு நொடியில் அன்பு கசிவெடுத்து வெள்ளமெனப் பாய்வது சேக்கிழார் காட்டும் சமுதாய நெறி.

மனையறத்தில் திருநீலகண்டரது மனைவியின் காதல்-அன்பு போற்றுதலுக்குரியது. குறை காணல் திருத்தத்திற்கேயாம் என்ற அறநெறியை அம்மையார் உலகிற்கு அளித்தார். வாழ்க்கையின் முதலாக, மையமாக, முடிவாகப் பரிணமிக்க வேண்டியது அன்பே என்பது சேக்கிழாரின் தத்துவம்; அன்பே சேக்கிழாரின் சமுதாயக் கொள்கை அன்பு நெறியே கோட்பாடு.

தொண்டு நெறி


தூய அன்பில் ஒப்புரவு நெறி தோன்றும்; திருத்தொண்டின் நெறி மலரும். அன்பின் விளைவு தொண்டு. அன்பின் பயன் தொண்டு. உயிர், உணர்விற் சிறந்ததை உறுதிப்படுத்தி, ஊதியமாக்குவது தொண்டேயாம். அன்பு ஆழமானதா? அன்பு, அன்பையே நோக்கமாகக் கொண்டதா? நிலையானதா? என்பனவற்றையெல்லாம் அளந்துகாட்டி விளக்கம் செய்வது தொண்டேயாம். அன்பினை மேலும் வளர்த்துப் பண்ணப் பணைத்த செல்வமாக்கி உறுதிப்படுத்தவதும் அன்பேயாம். அன்பிற் சிறந்தார் தொண்டராதல் இயற்கை அங்ஙனம் ஆகா திருந்தால் இயற்கைக்கு மாறு. அவர்கள் அன்பு உடைய வர்களா என்பது ஆய்வுக்குரியது. யாதொன்றன்பால் அன்பு காட்டப்படுகிறதோ அதனைப் பாதுகாத்தல் என்பது சராசரி அறிவு. ஆதலால், இறைவனின் துண்ணுடலாகவும் பருவுடலாகவும் விளங்கும் பரந்துபட்ட உயிர்த் தொகுதியின்பால்