பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அன்பு காட்டுதல் என்பது அவ்வுயிர்த் தொகுதியின் பாதுகாப்பு, வளர்ச்சி, அவைகளுக்கு உற்ற இடர்நீக்கல் முதலிய தொண்டிலே கொண்டுபோய்ச் சேர்க்கும்.

தொண்டு என்பது புலன்களில் ஒன்றிய பொறிகளின் வாயிலாகச் செய்யப்படும் பணி. இப்பணிகள் யாரை நோக்கிச் செய்யப் பெறுகின்றன என்பதைவிடப் பணிகளின் வகையையும் தரத்தையும் விடப் பணி செய்யும் மனப்பாங்கே தொண்டா? வணிகமா? என்பதைப் பகுத்துக் காட்டும் அளவுகோல். எவ்விதக் குறிபெதிர்ப்புமில்லாமல் திரு வருளையே முன்னிட்டுத் திருவருளுக்குச் செய்வதெனவே கருதிச் செய்யப்பெறுவது தொண்டு. அதனால் அப்பரடிகள், 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று அருளிச் செய்தார். 'கிடப்பதே' என்பது அஃறிணைக் குறிப்புச் சொல். உலகில் எந்தவோர் அஃறிணைப் பொருளும் மனித குலத்திற்குப் பயன்படாததன்று. ஆனால் அஃறினைப் பொருள்களில் எதுவும் நன்றியை, புகழை விளம்பரத்தை விரும்புவதில்லை. துறவிகளும் கூட அதுபோன்று பணி செய்ய வேண்டுமென்பதுதான்் மரபு. ஆனால் அஃறிணை நிலையில் அவ்வாறு மனச் செழுமையடைந்து தொண்டு செய்யும் துறவிகளை இன்று காண்பது அரிது. இன்றைய துறவிகள் அழுக்காறு, அவ்வழிப்பட்ட போட்டிகள், போட்டிகளில் தொடர்ந்த வழக்குகள், விளம்பர மோகங்கள் ஆகியவற்றிலேயே "பெரியவர்க"ளாக விளங்குகின்றனர். அப்பரடிகள் திருக்கோயிலிலும் உழவார்ப் பணி செய்தார். தெருவிலும் தொண்டு செய்தார்.

"பார்வாழத் திருவிதிப் பணிசெய்து
பணிந்தேத்திப் பரவிச் செல்வார்"


என்று சேக்கிழார் பாராட்டுவார், மன்பதை உய்தி பெறுதற்கு உரியன செய்தல் அனைத்தும் தொண்டேயாம். அப்பரடிகள் இளமைக் காலத்தில் செய்த தொண்டகளைச் சேக்கிழார்