பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடியார்களுக்குரிய உண்கலமாகிய திருவோடு தந்து உதவி செய்தார். திருக்குறிப்புத் தொண்டநாயனார் அடியார்களின் உடை அழுக்கைத் திருத்தித் தூய்மை செய்து தரும் தொண்டு செய்தார். இங்ஙனம் நடமாடும் கோயிலெனத் திகழும் அடியார்கள் மாட்டு அன்பு பூண்டு தொண்டு செய்தவர்கள் பலர். "நடமாடும் கோயில்” என்ற வழக்கு சாதாரணமாக மனிதனைக் குறிக்காது. கடவுள் எழுந்தருளாத கோயில், கோயிலாகாது, 'எம்பெருமானை, சிவத்தைத் தம் உள்ளத்தே கோயில் கொண்டருளச் செய்து உலாவரும் சிவனடியார்களே நடமாடும் கோயில்கள்'; இவர்களுக்குச் செய்வது சிறப்புத் தொண்டு. இவையனைத்தும் தொண்டு என்றே பெயர் பெறும். இத்தொண்டில் ஈடுபடுவார் யாருக்கும் உளத் தகுதியே தவிர வேறொரு ஈடுபாடும் இல்லை.

அடுத்து, பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்குச் செய்யும் தொண்டு. அதைத் "திருத்தொண்டு” என்று சிறப்பாகக் குறிப்பிடலாம். அப்பரடிகள் திருக்கோயில்கள் தோறும் சென்று உழவாரப் பணி செய்துள்ளார். அப்பரடிகள் காலம் தமிழகத்தில் சமண சமயம் பரவியிருந்த, காலம். தமிழக அரசர்களில் பலர் சமண சமயத்தைச் சார்ந்து விட்டனர். அதனால் தமிழகத் திருக்கோயில்கள் பல, பேணுவாரற்ற நிலையை எய்தின. மக்கள் சமண சமய அரசர்க்கு அஞ்சித் திருக்கோயில்களைப் பேணும் கடமையிலிருந்து விலகிவிட்டனர். அதன் காரணமாகத், திருக்கோயில் மண்டபங்களிலும், மதில்களிலும், கோபுரங்களிலும் அவற்றை இடித்துப் பாழாக்கும் மரங்கள், செடிகள் முளைத்திருக்கக்கூடும். திருக்கோயில்கள் தூய்மை இழந்திருக்கக் கூடும். சமணர்கள் திருக்கோயிலை முடி மறைக்கவே முயற்சித்தனரே- அதுதானே பழயாறை வரலாறு. ஆதலால் திருக்கோயில்களைப் பேணுதல் அந்தக் காலக் கடமை என்று அப்பரடிகள் எண்ணியிருப்பார். அதனாலேயே அவர் திருக்கோயிலைப் பேணும் உழவாரப்