பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருக்கோயிலில் கைத்திருத் தொண்டு செய்தல் எளிதான் பணியன்று. இதற்குக் கணநாதநாயனார் பயிற்சியே கொடுத்தார் என்று பெரியபுராணம் கூறகிறது. ஆனால் இன்று இப்பணி, தொண்டின் பாங்கில் வளரவில்லை. தொழில் முறையாக மாற்றம் பெற்றுவிட்டது. திருவேடம் தாங்காதவர்களும், திருவைந்தெழுத்து எண்ணதவர்களும் இன்று இப்பணியைச் செய்கின்றனர். கைத்திருத்தொண்டு செய்யும் மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். திருக்கோயில்களில் கைத்திருத்தொண்டு செய்பவர்கள் தரமும் தகுதியும் உடையவர்கள் ஆக வேண்டும். அவர்கள் சிறப்பு வாய்ந்த பணியாளர்களாகக் கருதப்பெற வேண்டும்; நடத்தப் பெற வேண்டும். அவர்களை, வருத்தும் வறுமையிலிருந்து மீட்க வேண்டும்.

அடுத்து, இறைவனை முன்னிட்டுச் செய்கிற தொண்டு. இந்தத் திருத்தொண்டில் கண்ணப்பர் ஈடு இணையற்ற தொண்டரானார். மற்றும் அரிவாட்டாய நாயனாரின், தொண்டு தலை சிறந்தது. சண்டீசர், குங்கிலியக்கலயர், அமர்நீதிநாயனார் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆக, சமுதாயத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் அன்பு காட்டித் தொண்டு செய்தவர்களைச் சேக்கிாார் நிரந்தினிது பேசியுள்ளார். இன்றைய சமயமும் சமுதாயமும் மீண்டும் தொண்டின் நெறியினால்தான் உய்தி பெறமுடியும். தத்துவங்கள் உயர்ந்தவையாக இருந்தால் மட்டும் போதாது; அத் தத்துவங்கள் செயலுருவம் பெற வேண்டும். ஆயிரம் தடவை தத்துவங்களைப் பற்றிப் பேசுவதைவிடத் தத்துவத்திற்குச் செயலுருவம் கொடுக்கும் பணியே சிறந்த பணி. பேச்சினால் வளர்ந்த கொள்கை கிடையாது; தொண்டினால் வளர்ந்த கொள்கைகளே உண்டு; அதனாலன்றோ சுந்தரர் வரலாற்றில் சிவத்தின் வாயிலாகச் சேக்கிழார் "வித்தகம் பேசவேண்டாம் பணி செய்ய வேண்டும்" என்று நமக்கு அறிவுறுத்துநின்றார்.