பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

181


புனலும் பூவும் சொரிந்து வழிபடும் உரிமை

வழிபாடு என்பது உயிர்கள் தம் உய்தி நோக்கிச் செய்வது வழிபாட்டில் அகக் கருவிகளும் புறக் கருவிகளும் ஈடுபடவேண்டும். வழிபாட்டில் நாம் ஒவ்வொருவரும் சிறக்க வேண்டுமானால், நாள்தோறும் தனித்திருந்து திருமுறைகள் காட்டுகின்ற நெறி வழியில் அகப்பூசையும் புறப்பூசையும் செய்ய வேண்டும். இங்ங்னம் செய்வோர் எண்ணிக்கை, வரவரக் குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்திலுள்ள ஆற்றங்கரைகளிலும் திருமடங்களிலும் இங்கனம் பூசை செய்வதற்கென்று அமைக்கப்பெற்ற மேடைகள் இன்று பயனற்றுக் கிடக்கின்றன. இங்ங்னம் ஒவ்வொருவரும் நாள்தோறும் முறையான சிவபூசை செய்ய இயலாது என்று கருதித்தான் போலும் திருக்கோயில் வழிபாட்டு முறையைக் கண்டன்ர். நாள்தோறும் எல்லாரும் முறையாக அகப்பூசை செய்தல் என்பது எளிதன்று. அத்துறையில் வல்லார் இன்று இருக்கிறார்களா என்பது ஐயத்திற்குரியது. அந்த அருமையான விஞ்ஞானக் கலையைக் கற்றுத் தருகின்ற சித்தர்கள் இன்று அருகிப் போயினர். ஆதலால் அகப்பூசை செய்வதி லுள்ள இடர்ப்பாட்டையும் காலத்தின் அருமையையும் கருதி அகப்பூசை நெறியில் நின்று, பெருமானைத் திருவுருவத்தில் எழுந்தருளச் செய்து நாம் எளிதாக வழிபடுவதற்கு உதவத்தக்க வகையில் தோன்றியதே திருக்கோயில் வழிபாடு என்று நாம் நம்புகின்றோம். இத்திருத்தொண்டைச் செய்து தருவதற்கு நம்மில் உயர்ந்தோராக-சான்றோராக-அந்தணராக விளங்கிய சிலரைத் தேர்ந்தெடுத்து ஒப்பித்தோம். அவர்களே ஆதிசைவர்கள். காலத்தாலும் சமுதாய வரிசையில் முன்னிற்பதாலும் அவர்கள் ஆதிசைவர்கள் ஆயினர். அவர்கள் சிறந்த செந்தமிழ்க் குடியினர்; நம்முடைய குலத்தினர்; நம்மோடு, நம் குலத்தினரோடு உண்ணல், உறவு முதலியன கொண்டிருந்தவர்கள். இதற்குச் சுந்தரர் வரலாறு சான்று. திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமானை நாள்தோறும் திருமுழுக்காட்டி, நாட்பூசனை செய்து,