பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உண்டு. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை வருத்திய அயல் வழக்கின் நுழைவு தடுத்து நிறுத்தப்பட்டதும், தமிழகம் முழுதும் சைவ எழுச்சி நிகழுமாறு செய்த பெருமையும் மகளிருக்கே உரியது என்பதைப் பெரியபுராணம் எடுத்துக் காட்டுகிறது.

வழிவழிச் சைவ குலத்தில் தோன்றிய மருணீக்கியாரே சமணத்திற்குச் செல்லும் அளவுக்கு அச்சமயம் கவர்ச்சியாகப் பரவியது. வாழ்க்கைக்கு இசைவில்லாததாகவும், உண்மைக்குப் புறம்பானதாகவும் இருந்த சமண சமயம், மந்திரங்கள், துன்ப நீக்கம், துறவிப் படைகள், தமிழ் இலக்கிய இலக்கண ஆய்வு பரப்புப் பணிகள், உயிர்கள் பால் இரக்கம் காட்டுதல் இன்னோரன்னவற்றால் கவர்ச்சியாகப் பரவியது. தமிழகத்தை ஆண்ட பல்லவப் பேரரசரும், பாண்டியப் பேரரசரும் சமண சமயத்தவராயினர். இந் நிலையில் இரண்டு கதிர்கள் ஞாயிறெனவும் தண்நிலவெனவும் தமிழகத்தை வலம் வந்து சைவ எழுச்சியைத் தந்தன. கண்ணுக்குத் தெரிந்த கதிர்களை விட அந்த வரலாற்றுக்குப் பின்னணியாக விளங்கிய தவச் செல்வங்களை நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

திருவதிகையில் தவம் செய்த திலகவதியார், திருநாவுக்கரசரைச் சிவநெறியில் நிறுத்தி நமக்குத் தந்தருளினார். திலகவதியாரின் தவம்தான்் திருநாவுக்கரசரின் திருத்தொண்டாகப் பரிணமித்தது. சேக்கிழார், "எங்கள் தெய்வம்" என்று நெஞ்சு நெகிழப் போற்றும் மங்கையர்க்கரசியார் திருஞானச்சம்பந்தரின் சிவநெறிக் காப்புப் பணிக்கு ஊன்றுகோலாகத் திகழ்ந்தார். இந்த மகளிர் குலவிளக்குகள் இரண்டும் தோன்றியிராவிடில் இன்று ஏது திருக்கோயில்கள்? இன்று ஏது திருமுறைகள்? ஆதலால் ஒவ்வொரு சைவனும் சேக்கிழார் வாத்தியபடி மங்கையர்க்கரசியாரைக் குல தெய்வமாக வணங்கவேண்டும், திலவதியாரைத் தொழும் தெய்வமாகக் கொள்ள வேண்டும்.