பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

191



"ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும்
துரிசுகளுக் குடனாகி"


என்று, தாம் செய்த துரிசுகளுக்கெல்லாம் பெருமான் உடனாகி இருந்ததாகப் பாடுகின்றார்.

பெருமான், சுந்தரர்க்கு உற்ற தோழராக இருந்தார். தோழமையில் அன்பும் இருக்கும்; விளையாட்டும் இருக்கும்; உதவியும் இருக்கம்; ஒறுத்தலும் இருக்கும்; இன்பமும் இருக்கும்; துன்பமும் இருக்கும். இவற்றை ஏற்றுத் தாங்கிக்கொண்டு நிகழ்வதே நட்பு. பெருமான் சுந்தரர்க்குச் சிறந்த நண்பராகத் திகழ்கிறார். ஐயோ, பாவம் கழுகும் கண்படுக்கும் நள்ளிரவில் தம் தோழர் ஆரூரருக்காகப் பரவையார் வீட்டுக்குத் தூது சென்றுவரும் காட்சியைச் சேக்கிழார் எடுத்தோதும் பொழுது, நமக்குச் சிவபெருமானமீது இரக்கமே தோன்றுகிறது. அதனால்தான்் போலும் அன்றும் ஏயர்கோன் கலிக்காமர் வருத்தினார். ஆனால் அதில் பெருமான் பெற்ற மனநிறைவு நாமறியோம். மீண்டும் மனித உலகம்- தோழமையில் தழைப்பதாக! ஆரூரர்-அண்ணல் சிவம் இருவரிடையே இருந்த நட்பைப் போல நட்பு நலன்களைப் பெற்று வளர்க வாழ்க!


ஒப்புரவு வாழ்க்கை

பெரியபுராணம் முழுதும் ஒப்புரவு நெறி பேசப் பெற்றுள்ளது. விருந்தோம்பல் சிறந்த வேள்வியாகப் போற்றப் பெற்றுள்ளது. இல்லையென்று சொல்லாது ஈதல் வாழ்வின் கடன் என்று கொண்டவரும் வாழ்ந்திருக்கிறார். பெரிய புராணம் காட்டும் ஒப்புரவு நெறியில் மிக உயர்ந்தது பரவையார் மேற்கொண்ட நெறி. திருவருளால் மழையெனப் பொழிந்த நெல் மலையை "எல்லாரும் அவரவர் தம்