பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று போற்றப் பெறுமா? எண்ணுங்கள்? துன்பத்தை எதிர்த்துப் போராடுங்கள்! தொழுதகைத் துன்பம் துடையுங்கள்! எங்கும் இன்பம்! எல்லாருக்கும் இன்பம் என்ற புதுமை நிறைந்த-பொதுமை நிறைந்த சமுதாய அமைப்பே சைவ சமுதாயமென முடிவு செய்யுங்கள்! முடிவுக்கு முனைப்புத் தாருங்கள்! முனைந்து நிற்கும் பணியைப் பொதுவில் ஆடுபவன் முடித்து வைப்பான்! பொதுமைச் சமுதாயம் அமையும்! இம்மண்ணகம் விண்ணகமாகும்! இதுவே சேக்கிழாரின் சமுதாயச் செந்நெறி.

வாணிகச் சிறப்பு

சேக்கிழார் சமுதாய நிகழ்வுக்குரிய அனைத்துத் துறை களையும் வாய்ப்பு ஏற்படும் பொழுதெல்லாம் பாராட்டு கிறார். பல்வேறு தொழில்களை மேற்கொண்டோரும் பெரிய புராணத்தில் உள்ளனர். நாம் பல்வேறு தொழில்களையும் எடுத்து விளக்க விரும்பினாலும் விரிவஞ்சி விடுக்கின்றோம். ஆயினும் இன்றைய சமுதாய அமைப்பில் வாணிகம் முதன்மை நிலையை அடைந்திருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு வாணிகம் வளர்ந்து வருகிறது. ஆனாலும் வாணிகத்திலும் வியாபாரமே வளர்ந்து வருவது வருந்து தலுக்குரியது. வாணிகம் என்பது உள்நாட்டுப் பொருள்களை அயல்நாடுகளில் விற்றுச் செல்வம் கொண்டு வந்து சேர்ப்பது. வியாபாரம் என்பது கிழக்கு வீதியில் வாங்கி மேற்கு வீதியில் விற்பது வியாபாரத்தில் உற்பத்தித் தொடர்புமில்லை; அயல்நாட்டுச் செல்வமும் இல்லை. மறைமுகமாகக் நம்மிடத்திலுள்ள செல்வத்தைச் சுழற்றிவிடுவதும் சுரண்டு வதும்தான்். இத்தகைய வியாபார முறை இன்று பெருகி வருகிறது. நகரங்கள் தோறும் கடைகள், பெருகி வருகின்றன. "பிழைப்பில்லையா? பெட்டிக்கடை வை” என்கின்றனர். இதனால் நம் நாட்டுச் செல்வ வளம் வற்றிவருகிறது.