பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்தப் பாடலில் மிகவுயர்ந்த அரசியல் நீதியைக் கூறுகிறார். சேக்கிழார். நம்முடைய வாழ்க்கையில் நடைமுறை நிகழ்வு களைக் கூர்ந்து நேக்கி இந்தப் பாடலைச் சிந்திக்கும் பொழுது பலவற்றை உணரமுடிகிறது. உயிர்களுக்கு ஆட்சியால் தொல்லை நேரக் கூடாது. ஆட்சி என்பது உயிர்களுக்குக் காவற் பணியே தவிர அஃது அதிகாரமன்று. காலப்போக்கில் அஃது அதிகாரமாகிவிட்டது. ஆட்சி மக்களை வருத்துதல் கூடாது. ஆட்சியில் அமர்ந்துள்ளவரின் பரிவாரங்கள் இருக்கின்றனவே, அவற்றால் வரும் தொல்லைதான்் அதிகம். தன்னுடைய பரிவாரங்கள், உறவினர், சுற்றத்தார் முதலியோர் தன்னிடத்துள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி மக்களுக்குத் துன்பம் செய்யாமல் அரசு பாதுகாக்க வேண்டும்.

அடுத்து, மிக நுட்பமாகச் சேக்கிழர் ஒன்றைக் குறிப்பிடுகின்றார். பகையேயில்லாதவர் யாருமிலர்; இருந்தலும் இயலாது. அதிலும் இந்த நூற்றாண்டில் ஒருவர் பெற்றுள்ள திறமையும் பெருமையுமே மற்றவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாதபோது, பகையில்லாமலிருந்துவிட இயலாது. ஆனால் அந்தப் பகை வலிமையுடையதாக இருக்காது; நேரில் சந்திக்கச் சக்தியற்றிருக்கும். அப்போது ஆட்சியைக் கருவியாகப் பயன்படுத்தி அது தன் பகை முடிக்க எண்ணும். அன்று சமணர்கள் பல்லவ அரசைப் பயன்படுத்தினர். இன்றும் நெருக்கடிகால அரசைப் பயன்படுத்தினர்; தமது பகையைத் தாம் சந்திக்க முடியாமல் அரசைத் துணையாகப் பெற முயலும்போது அரசு உடன் போதல் நெறியன்று. ஆட்சியாளர், மற்றவர்தம் நடை முறையில் குற்றங்களை, ஆட்சியின் நடைமுறையிலேயே காண வேண்டுமே தவிரப் பகைவர் வாயிலாகக் கேட்டு, பகைவர் கூறும் அக்குற்றமிருக்கும் என்று நம்பி, பின் நம்பியது மோசமாகிவிடக் கூடாதே என்று கருதிக் குற்றத்தைப் படைத்துக் காட்டுதலோ, உள்ளதைப் பெரிதாக்கிக்