பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

197


காட்டுதலோ போன்ற குற்றத்தை அரசு செய்தல் கூடாது. மற்றபடி கள்வர், கொடிய விலங்குகள், விலங்கனைய மாக்கள் அதாவது கயவர் இவர்களிடமிருந்தும் அரசு குடிகளைக் காப்பாற்ற வேண்டும். இங்ங்னம் ஐவகை நெறியாலும் பாதுகாக்கும் அரசே அரசு. சேரமான் பெருமான் நாயனார், அவர் தம் ஆட்சியிலமைந்திருந்த அனைத்து உயிர்களும்- ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை கழறுவன அறிந்து, அவையுற்ற துன்பம் நீக்கி ஆட்சி செய்தமையை எங்ங்ணம் வாழ்த்துவது! அத்தகைய நல்லரசு அமையத் தவம் செய்வோமாக!

இறைவன் வாழ்வுப் பொருள்

சேக்கிழார் இறைவழிபாட்டை எப்படிக் கருதுகின்றார்? ஒரு மனிதன், சராசரித் தகுதியுடையவனாக இருப்பதற்கு அவன் இறைவழிபாடு நிகழ்த்தபவனாக இருக்க வேண்டும் என்று சேக்கிழார் ஐயத்துக்கிடமின்றிக் கூறுகிறார். அதனால் சிவனடியார் என்ற தகுதி எங்கும் எதிலும் வற்புறுத்தப் பெறுகிறது. ஆனால் சிவம் வாழ்த்துப் பொருள் மட்டுமல்ல-வாழ்வுப் பொருள் என்பதைச் சேக்கிழார் தொடர்ந்து வலியுறுத்துகிறார். சுந்தரர் வரலாற்றில் சிவம், சுந்தரர்க்குத் தோழமையாய்ப் பொன்னும் மெய்ப்பொருளும் தந்து, போகமும் திருவும் புணர்த்து வாழ்வளித்தது அறிதற் குரியது. இறைவன் அச்சுறுத்துவான்! நரகமும் தருவான் என்ற பயக்கொள்கை அயல்வழி ஊடுருவலால் வந்தது. அந்தக் காலத்தில் சேக்கிழார், மண்ணில் பெருமானை நடமாட வைக்கின்றார். உற்ற தோழனாக உலாவர வைக்கிறார். திருக்கச்சூரில் இறைவன் ஆரூரருக்காக இல்லங்கள் தோறும் சென்று இரந்து வரும் நிலையை உலகில் உள்ள வேறு எந்தக் காப்பியத்தில் காண முடியும்? இன்றும் இறைவனை வாழ்த்துப் பொருளாகக் கொள்ளாமல் வாழ்வுப் பொருளாகக் கொள்ளும் சேக்கிழார் செந்நெறியை மேற்கொள்வோமாக!