பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உணர்வாரில்லை. அறிவுத் துறையில் ஒரு போலி மயக்கம் எங்கும் காணப்படுகிறது. எல்லாம் தெரிந்தவர்களாகக் காட்டிக்கொள்ளும் தவறு மலிந்து வருகிறது. அறியாமையை விடக் கொடுமை, அறியாமையை அறிவு என நம்புதல்; மற்றவர்க்குக் காட்டுதல். இந்தப் புல்லறிவு இன்று எங்கும் பரவலாகக் காணப்பெறுகிறது.

ஒருநூலைக் கற்கவும், ஆராயவும் தொடங்கும் ஒருவன், முதலில் தன்னை நடுநிலைக்கு ஆளாக்கிக் கொள்ள வேண்டும். சார்புகளுக்கு ஆளானவர்கள் வழக்கைக் கேட்காமலேயே முடிவை எழுதி வைத்து விடுவார்கள். நூலை, நூல் வழி நின்று ஆராயாமலே எடுத்துரைக்கத் தலைப்படுவர். இம்முறை அறிவியலுக்கும் பயன்தாராது; அனுபவத்திற்கும் துணைவராது.

இலக்கியம் தோன்றிய பிறகே, அதன் இலக்கணம் அவ்விலக்கியத்தின் அடிப்படையில் தோன்றுகிறது. இலக்கியத்திற்குப் பின்னே தோன்றிய இலக்கணத்தின் அடிப்படையில் உரைநலம் காண்டது, பொருள்நலம் காண்டது நேரிய மரபு ஆகாது. அந்த இலக்கிய உத்திகளுக்கேற்பப் புதிய இலக்கண விதிகள் தோன்ற வேண்டுமே தவிர, இலக்கணம் நோக்கி இலக்கியச் செழுமை சிதைக்கப்படுதல் முறையன்று. நடைபயிலும் கால்களில் தளை பூட்டுதல் நடையைத் தடுக்கும். அதைவிடக் கொடுமை, சிந்தனைக்குப் பழக்கவழக்கங்கள் என்ற தளைகளைப் பூட்டுதல், பழக்க வழக்கங்கள் என்ற தளைகளுக்குள் சிக்கி நூலை ஆராயப் புகும் பொழுது, நூலின் கருத்து மேம்பட்டு விளங்குவதற்கு மாறாக, நமது பழக்க வழக்கங்களே மிஞ்சும். அதனால் நமது பழக்க வழக்கங்களுக்கு அந்த நூலாசிரியனைச் சாட்சியமாக்குவதே வழக்கம். நாம் நூலாசிரியனை நோக்கிப் பயணம் செய்வதென்பது இல்லை.

அடுத்து, நூலாசிரியனிடத்தில் மரியாதை - மதிப்பு என்பது நூலாசிரியனொடு மாறுபடாதது என்று கருதுகின்ற