பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உமையொடு காதலித்து வாழலாம். ஆனால் அடியார் காதலித்து வாழக் கூடாதா? கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், காதல் எல்லாம் ஒருதன்மையாமோ? இறைவன் உமையொடு காதலித்தல் உடல் நினைவு நீங்கிய உணர்வுக் காதல்; காரணங்கடந்த காதல், மயக்கம் இல்லா மாண்புறு காதல்; உலகு இன்புறக் காதலிக்கும் காதல். ஆலாலசுந்தரர் காதலோ உடல் வழிப்பட்டது. மயக்க நிலையினது. மயக்க நிலைக் காதலுக்குரிய இடம் மண்ணகமே. ஆலாலசுந்தரரின் காதல், ஆலாலசுந்தரருக்குப் பிறப்பைத் தந்தது; அடியார் உலகத்திற்குத் திருத்தொண்டத் தொகையைத் தந்தது; அமரர் தம் தலைவனை ஈசனை ஆரூர்த் தெருவில் நடக்க வைத்தது; தென்திசைப் புகழினை உலகுக்கு உணர்த்தியது. திருத்தொண்டர் புராணம் தொடங்குகிறது.

கயிலைக்கு நிகரான பெருமை தமிழகத்திற்கு உண்டு. தமிழகத்தின் திருவையாறு தென் கயிலையாயிற்று. அதனாலன்றோ மாதவம் செய்த தென்திசை என்று போற்றப் பெறுகிறது. ஆதலால், கயிலையில் தொடங்கிய திருத்தொண்டர் வரலாறு - தமிழகத்தில் நிகழ்கிறது. தையல் தமீஇய மனம் உடையவராய்த் தோற்றிய சுந்தரர் 'தம்பிரானைத் தம் உள்ளம் தழிஇயவராக வளர்ந்து - உபமன்னிய முனிவரும் தொழும் தன்மையராக உயர்ந்த வரலாறு திருத்தொண்டர் புராணத்தின் கருப் பொருள். ஆலால சுந்தரரின் காதல் கயிலையில் மயக்க நிலையில் தொடங்கினும், மண்ணகத்தில் அக்காதல் வளர்ந்து தூய்மை நிலை எய்தியது. "பெற்ற சிற்றின்பமே பேரின்பமெனின்" எனவும் "சங்கிலியார் மென்றடந்தோள் தோயினும் நின் திருவருள் மறக்க கில்லேன்" எனவும் வாழும் பெரு நிலைமையினைச் சுந்தரர் பெற்றார். காதல் சிறந்துழிவேட்கை தணியும், தூய காதல் விடுதலைக்குத் துணை செய்யும், மனையறம் தீதன்று நெறி வழி நிகழின்