பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெற வேண்டும் என்ற படிப்பினை கிடைக்கிறது. உயிர் வாழ்க்கை உய்தி பெற வேண்டும். அதற்கு என்ன வழி: இறைவன் திருநாமத்தை - ஐந்தெழுத்தை எண்ணுதல் தானே! உயிர் வாழ்க்கைக்குப் பொருள் திருவைந்தெழுத்து என்பதை "வைத்த பொருள்” என்ற அப்பர் அருள் வாக்கால் அறியலாம். திருப்பாண்டிக் கொடுமுடியில் சுந்தரர் திருவைந்தெழுத்துப் பாடியருளுகின்றார். சுந்தரர் திருப்பதி கத்தில் இந்த "நமசிவாயத் திருப்பதிகம்” மிகவும் சிறப்புடைய தாக அமைந்துள்ளது.

ஏன்; கொடுமுடி இறைவன் பால் ஆரூரருக்குப் பொங்கி எழுந்த வேட்கையை எடுத்துச் சொல்ல முடியாமல் சேக்கிழார் தவிக்கிறார். இத் திருப்பதிகத்தைச் சுந்தரர், செழுந்தமிழில் அருளிச் செய்ததாகக் கூறிப் போற்றிப் பாராட்டுகின்றார் சேக்கிழார். மெய்ப்பொருளை உணர்த்தி அதன் பெருமையை வழுத்த திருவைந் தெழுத்தை உட்கொண்ட தமிழாதலால் செழுந்தமிழ் என்றார்.

பற்றுக்கள் நிறைந்தது வாழ்க்கை. சுந்தரர் பொன்னும் மெய்ப் பொருளும் போகமும் பெற்றுத் துய்த்து வாழ்ந்தவர். ஆனாலும் அவை சுந்தரருக்குப் பற்றாகி விடவில்லை. இறைவன் திருநாமமே பற்று என்று அயரா அன்பில் பாடுகின்றார்.

          "மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
          பாதமேமனம் பாவித்தேன்."

என்பது அருள் வாக்கு.

        "நான் மறக்கினும் சொல்லும் நா
         நமசிவாயவே!

அதாவது நினைந்து நினைந்து சொல்லுமியல்பில் மனத்தை நாவைப் பழக்குதல் என்பது கருத்து. பாண்டிக் கொடுமுடி பதிகம் உலகெல்லாம் உய்யும் திருப்பதிகம் என்று சேக்கிழார்