பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

229


முறைத்துப் பேசிய சுந்தரர் திருக்கற்குடியில் அஞ்சிப் பேசுகிறார். வெயிலையும் மழையையும் ஒருங்கே காண்பது போன்றது. சுந்தரர் தம் வாழ்க்கையில் இறைவனுடன் கொண்ட உறவு. சுந்தரர் இறைவனை அடிகேள்! என்று நயம்பட விளிக்கிறார்! வெஞ்சமாக் கூடலில் தாம் பேசிய பேச்சில் இறைவனுக்குச் சினம் வரக்கூடாதென்பதால் திருக்கற்குடியில் பெரியோரே!' தவத்திற் சிறந்த அடிகேள் என்றும் விளித்தல் அறிக.

பெருமான், சினம் கொள்பவனாக இருந்தாலும் மருந்து போலத் துன்பம் நீக்குபவன் என்றும் அருட் சக்தியாகிய உமையம்மையை இடப்பாகத்தில் கொண்டிருப்பவன் என்றும் நயம்பட விளித்துப் பாடுகிறார்.

திருக்கற்குடிப் பதிகத்தில் 'அஞ்சற்க! என்று தன்னை ஆட்கொள்ளுமாறு வேண்டுகிறார். உலகியல் நோக்கி அஞ்சாமையை அருள் செய்யும்படி வேண்டுகிறார். திருக்கற் குடியிலிருந்து ஆரூரர் காவிரியைக் கடந்து வடக்கு நோக்கிப் பயணம் செய்கிறார். திருவாறை மேற்றளியை வணங்கித் திருஇன்னம்பருக்கு வருகிறார்.

திருஇன்னம்பரில் பலநாள் தங்கி, திரு இன்னம் பரீசனை வழிபடுகிறார். ஆயினும் திரு இன்னம்பர் இறைவன் ஆரூரர் செய்யத்தக்கது இன்னதென்று அருளிச் செய்ய வில்லையாம். இது ஆரூரர்க்கு இன்னம்பரில் ஏற்பட்ட மனக்குறை. அதனால், நெஞ்சமே, இன்னம்பர் இறைவன் செய்யத்தக்கது இன்னதென்று தெளிவித்தாரில்லை. புறப்படு! புறம்வயம்தொழச் செல்வோம்' என்று தமது நெஞ்சத்தை விளித்துக் கூறுகிறார்.

           அங்கம் ஒதியோர் ஆறை மேற்றளி
               நின்றும் போந்துவந்தின் னம்பர்த்
          தங்கி னோமையும் இன்ன தென்றிலர்
              ஈச னார்எழு நெஞ்சமே!’ (ஏழாந்திருமுறை - 351)