பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

233



போற்றும் தகையன பொல்லா முயலகன்
கோபப் புன்மை
ஆற்றும் தகையன ஆறு சமயத்(து)
அவ ரவரைத்
தேற்றும் தகையன தேறிய தொண்டரைச்
செந்நெறிக்கே
ஏற்றும் தகையன இன்னம்ப ரான்தன்
இணையடியே.


இங்ஙணமிருக்க சிலர் சமயங்களிடையில் சமரசம் என்ற பெயரில் சமயக் கலப்படம் செய்து குழப்ப நினைக்கின்றனர். சமயங்களிடையே இணக்கம் தேவை. உறவு தேவை; ஒருமைப்பாடு தேவை, சமய ஒருமைப்பாடு மனித குலத்திற்குத் தவிர்க்க முடியாத தேவை. ஆயினும் ஒருமைப்பாட்டிற்கும் கலப்படத்திற்கும் உள்ள வேறு பாட்டைத் தெரிந்துகொள்ள வேண்டும். கலப்படத்தினால் தத்துவத் தெளிவு இல்லாமம் போகும்; சமய அனுபவங்கள் கிடைக்காது. ஒரு கடவுள் வழிபாடு இருக்காது. சமயத் தத்துவக் கலப்படம் - உணவுக் கலப்படத்தை விடத் தீயது. இந்தக் கலப்படத்தைக் காஞ்சி காமகோடி பீடம் துணிந்து செய்து வருகிறது. தரமான பொருள்களை விற்போருக்கு விளம்பரம் குறைவு. பொருளின் தன்மையறிந்து வாங்குவோர் வருவர். போலிகள் கூவியழைத்து விற்பர். இன்றும் எப்படியாவது இந்து சமயம் என்ற பெயரமைப்பினைச் சாதகமாகக் கொண்டு சமயக் கலப்படம் செய்வதிலும் மறைமுகமாக மக்களை வேற்றுமைப் படுத்தி அழிப்பதிலும் முனைந்து நிற்கும் காஞ்சி காமகோடி பீடத்தின் சின்னப் பெரியவரின் செயல் முறைகள் ஏற்கத் தக்கனவல்ல. தமிழகத்தில் அறிஞர் ஏற்கும் ஒரே சமயம் சித்தாந்தச் சமயமே! அதுவே ஒரு வழி! இந்த வழியே ஆரூரரை - ஆற்றுப்படுத்தி வழித்துணையாக இருந்து இறைவன் அழைத்துச் செல்கின்றான்.