பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொன்னை இடுகின்றார். இங்கு ஆரூரர் அப்பட்டமான உலகியலைச் சார்ந்த மனிதராகவே விளங்கி ஒரு செயல் செய்கிறார். நம்பிக்கை-நம்பிக்கையின்மை என்று போராடுவது மனித இயற்கை இறைவனின் ஆற்றலை நம்பி-ஆணையை நம்பி ஆற்றில் பொன்னை இடுகிறார். அதே போழ்து எந்த மச்சத்தில் பொன்னை இட்டாரோ அதே மச்சத்தில் திருவாரூருக்குப் பொன்வந்து சேருகிறதா என்று அறிந்து கொள்ள ஐயப்பாட்டுணர்வுடன் ஆற்றில் பொன்னை இடும் முன் மச்சம் வெட்டி வைத்துக் கொள்கிறார். அது மட்டுமா? அன்று வலிய வந்து "தோழன்" என்று சொல்லி ஆட்கொண்ட அருளினை-அந்த அருளிப் பாட்டின் உண்மையினை இச்செயலில் அறியப்போகிறேன் என்றும் கூறுகிறார். இச்செயல் ஐயப்பாட்டின் வழியது என்றும் கூறலாம்.

அங்ஙணம் கூறுவதை விட வேறு வகையிலும் நாம் எண்ணவது நல்லது. நம்பிக்கையின் பாற்பட்டு மட்டும் சிந்திக்கக்கூடாது; செயலாற்றக் கூடாது. வாழ்க்கையின் நடைமுறைகளுக்கு இசைந்ததாகவும் இருக்க வேண்டும். பொன்னை எண்ணுதல்; மச்சம் வெட்டி வைத்துச் சோதித்தல் போன்றவை வாழ்க்கையின் நடைமுறைக் கடமைகள் என்று பொருள் கொள்ளலாம். ஆரூரர், பழமலைநாதர் அருளித் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் இட்டுவிட்டுக் கவலையின்றி மேலும் திருத்தலப் பயணத்தைத் தொடர்கின்றார்; தில்லை நோக்கிப் பயணம் செய்கின்றார்.

தில்லையை நோக்கி நம்பியாரூரரின் புனித யாத்திரை தொடர்கிறது. இடையில் கடம்பூர் என்ற திருத்தலத்தை வணங்கியதாகத் தெரிகிறது. ஆனால் இதுபற்றிய விளக்கங்கள் கிடைக்கவில்லை. மற்றும் தில்லை செல்லும் வரையில் உள்ள பல்வேறு திருத்தலங்களிலும் வழிபாடு செய்து கொண்டு தில்லை நகரை வந்தடைகின்றார். தில்லைத் திருக்கோயிலில் மேற்குக் கோபுரப் புண்ணிய வாயில் வழியாகத்