பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவனும் அகப்படுவதில்லை. இன்று இறை வழிபாட்டிலும் பரபரப்பு: நெருக்கடி! ஆரவாரம்! தனியே இருந்து தேடுவாரைக் காணோம்! உலகியல் காதலுக்கு எவ்வளவு தனிமை தேவையோ அதே அளவு இறைவனிடத்து ஒருவர் காதலித்து அன்பு செய்யத் தனிமை தேவை. பலரறிய காதற் செல்கள் செய்வதை அநாகரிகம் என்று கருதுகிற உலகம், பொது மானிடஒழுங்கிற்குத் தீங்கு என்று கருதி அபராதம் விதித்திடும் உலகம், ஒருவர் தன்னுடைய ஆன்ம நாயகனாக விளங்கும் இறைவனைப் பூசிப்பதைக்கூட ஆரவாரமாக்கி, காட்சியாக்கிக் காசு பறிப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. இது சமய நெறிக்குப் புறம்பான போக்கு!

எது வழிபாடு?

நம்பியாரூரர், இறைவனை நினைத்து வழிபடும் நெறியில் நம்மை ஆற்றுப்படுத்துகிறார். காற்று மண்டலத்தைத் தண்மை செய்து உதவும் சோலையை நாடுக! தனிமையாக, நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்திடுக! கண்களைச் சற்றே மூடுக! இறைவனை உள்ளே தேடுக! தேடிப் பிடித்த இறைவனை உள்ளத்தில் அன்போடு நினைத்திடுக! உள்ளத்தால் உரையாடுக! இதுவே வழிபாடு. இந்த வழிபாடு, திருக்கோயிலை எடுத்து எழுந்தருளச் செய்யும் வழி பாட்டினும் சிறந்தது என்பதை, பூசலார் நாயனார் வரலாற்றில் சிவபெருமான் உணர்த்துகிறார். இன்று இத்தகைய வழிபாடு எங்கு நடக்கிறது? எந்தத் திருக்கோயிலில் செய்ய இயலும்? இந்த வழிபாட்டு நெறிக்குப் பதிலாக இன்று ஆரவாரமான திருக்கோயில் குட முழுக்குகள்! தனித்திருக்க, உன்னி உன்னி நினைத்திருக்க இயலாத நிலைக்கு உலகியல் வாழ்வு நம்மைப் பிடர்பிடித்துத் தள்ளுகிறது! ஏன்? இங்கனம் செய்கிற வழிபாடு உண்மையல்ல என்று சொல்கிற பொய்ம்மை உலகம் வெற்றி பெற்றாலும் வியப்பில்லை.