பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருமண்ணிப் படிக்கரையென்ற திருத்தலத்துக்குச் சென்றார். - திருமண்ணிப் படிக்கரைத் திருத்தலம் இயற்கைச் சூழலில் அமைந்த திருத்தலம். இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை, அளவற்ற புகழ்படைத்த திருப்பதிகம் ஒதிப் பரவுகின்றார். திருமண்ணிப் படிக்கரைப் பதிகத்தில் பெருமானை "எங்கள் பிரான்” என்று பாடல் தோறும் அழைத்து மகிழ்கின்றார். திருமண்ணிப் படிக்கரையில் எழுந்தருளியுள்ள இறைவனை ஏத்தினால் வாழ்க்கை திருந்தும்; வாழ்க்கை திருந்தினால் வருத்தம் மாறும் என்றெல்லாம் கூறி நம்மை ஆற்றுப் படுத்துகிறார்.

அயனும் மாலும் அருச்சித்தற்குரிய மூர்த்தியாக எழுந்தருளியுள்ள பாங்கை இயம்புகின்றார். திருமண்ணிப் படிக்கரையிலுள்ள இறைவனை அட்ட புட்பங்களால் அயனும் மாலும் அருச்சித்தனர். அட்ட புட்டங்களாவன; புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தனம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை என்பனவாகும். திருமண்ணிப் படிக்கரையிலுள்ள இறைவன் நஞ்சினை உண்பவன், எருதில் ஊர்ந்து வருபவன். மண்ணிப் படிக்கரை இறைவனின் இந்தச் செயல்களால் அவனைப் பித்தன் என்று எண்ணற்க! இகழ்ச்சி செய்யற்க! அவனைப் பற்றித் தொழுது பாவங்கள் அறுத்திடுக! என்று அறிவுறுத்துகின்றார்.

இத்திருப்பதிகத்தை ஒதி முடித்த நம்பியாரூரர், கடைக்காப்புப் பாடலில் நிறைந்த பயனை அருளிச் செய்துள்ளார். இத்தமிழ்ப் பாடலை இரவிலும் பகலிலும் சொல்லுநருக்குத் துன்பமில்லை! கேட்டவர்க்கும் துன்ப மில்லை! இத்திருப்பதிகத்தைச் சொல்லுநர்க்கும் கேட்டவர்க்கும் அவர்தம் உற்றாருக்கும் அந்த உற்றாரைப் பின்பற்றி வரும் சுற்றத்தாருக்கும் துன்பம் மிகுதலில்லை என்று அருளிச் செய்துள்ளார். பல்லுயிர் வாழும் தெண்ணீர்ப் பழமண்ணிப் படிக்கரையைத் தொழுது வணங்கிப் பயணத்தைத் தொடர்கிறார்.