பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

251


ஏற்றுக் கொள்ள விருக்கும் வீட்டினை-உடலினைத் தவிர்க்கும் பொருட்டுப் பாடியது. ஆதலால் வாழ்க்கையில் ஆசைகளை நீக்கு வோமாக! அன்பினைச் சேர்ப்போமாக! இதற்குத் துணையாக மூவர்க்கும் முதல்வனாக நிற்கும் இறைவனிடத்தில் வைத்த மனம்மாற்றாது நினைந்து வழிபடு வோமாக! இத் திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டே திருஎதிர்கொள்பாடியை வந்து அணைகின்றார்.

அறிந்தால் ஆட்படோமே?

நம்பியாரூரர் திருஎதிர்கொள்பாடியில் எழுந்தருளியுள்ள இறைவனை வாழ்த்தி வணங்கிய பிறகு, திருவேள்விக் குடியை வந்தணைந்தார். திருவேள்விக்குடியிலேயே, திருத்துருத்தித் திருத்தலதையும் எண்ணி இணைந்து நினைந்து வழிபடுகிறார். ஆயினும் இத்திருப்பதிகத்தில் திருத்தலப் பதிகம் போல் பாதோறும் ஈற்றடியில் தலத்தின் பெயர் வரவில்லை. முதற்பாடலில் மட்டுமே தலங்களைப் பற்றிய குறிப்புக்குள் வந்துள்ளன. இத்திருப்பதிகம் இறைவனின் நிலையை விளக்கும் புதிகம். எந்த உயர்வுக்கும் உலகியலை நோக்க இழிநிலைகள் உண்டு. உலகியலும் உயர்வும் ஒத்தே இருத்தல் இல்லை. முற்றாக உலகியலைச் சார்ந்தவர்கள், உயர்நிலைகளை எள்ளுவர்; பழித்துரைப்பர். "சகம் பொய்யென்று சிரித்திட” என்றும், "நின்னடியான் என்று ஏசப்பட்டேன்” என்றும் திருவாசகம் கூறுவது காண்க.

மூப்பதுமில்லை!

சுந்தரரின் இத்திருப்பதிகத்தில் இறைவனின் உயர்வு நிலைகள் ஒதப்படுகின்றன. உலகியலை நோக்க உள்ள இழிவு நிலைகளும் பேசப்படுகின்றன. நம்பியாரூரர் தாம் இறை வனுக்கு ஆட்பட்ட நிலையை நகைச்சுவையுடன் உறுதிப் படுத்துகின்றார்.