பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போற்றப் பெறும். ஒரு பெண்ணைத் தான்் அடைந்து துய்த்தல் வேண்டும் என்று எண்ணி முயலும் பொழுது கொச்சைத் தனமானகாமம் ஆகிவிடுகிறது. தொண்டு செய்தலில் பித்தாதல் உண்டு. அத்தொண்டே விளம்பரப் பெருமை கருதிச் செய்தால் பித்தன்று.

இறைவன் பித்தன். ஆம், அவனுக்கு அவன் நிகழ்த்தும் இன்பக் கூத்தால் ஆவதென்? ஐயன் தொழிலால் அடையக் கூடியது என்? எல்லாம் உயிர்களின் உய்தியின் பொருட்டேயாம்! ஆதலால் இறைவன் ஒருவனே பித்தன்! "பித்தரை ஒத்தொரு பெற்றியர்” என்று வாழ்த்துகின்றார்.

நம்பியாரூரர், திருவேள்விக் குடியை வணங்கி மகிழ்ந்து திருவாரூரைச் சென்றடைகின்றார்.

திருவாரூர் சென்றணைதல்

திருவாரூர் வந்து சேர்ந்த நம்பியாரூரர் திருவாரூரில் எழுந்தருளியுள்ள பெருமானை வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றார். பின், பரவையாரின் திருமாளிகைக்குச் செல்கின்றார். சேக்கிழார், பரவையாரை "தாவாத புகழ்ப் பரவையார் திருமாளிகை சார்ந்தார்” என்றருளிச் செய்துள்ளமை நினைவிற்குரியது. சேக்கிழார் பெண்மையைப் பெருமைப்படுத்தும் திருவுள்ளத்தினர். தமிழர் நெறி பெண்ணடிமைத் தனத்தை ஏற்பதில்லை; பெண்மையைக் கொச்சைப்படுத்துவதும் இல்லை. பெண்ணைத் துறப்பதே துறவு என்றும் தமிழ்நெறி கூறியதில்லை. நம்பியாரூரர் பெரும் புகழுடையவர். அவர்தம் வாழ்க்கைத்துணை நலமாக அமைந்த பரவையாரும் தாவாத புகழுடையவர்; எஞ்சுத லில்லாத பெருமையுடையவர். பரவையார் வசித்த மாளிகையை, "திருமாளிகை" என்று சேக்கிழார் பாடிப் பரவுகின்றார்.