பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறைவிலாப் பொன்முடிப்பினைக் காட்டியருள்கின்றான். ஆரூரர் எடுத்துக்கொண்டு கரை ஏறுகின்றார். எடுத்த பொன் பொதியினை ஆட்களின் தலையிலேற்றிக் கொண்டு பரவையார் மாளிகை நோக்கிச் செல்கின்றார். இடையில் திருவாரூர் பெருமானைப் பணிந்து பரவிச் செல்கின்றார். பரவையாரின் மாளிகையில் சிந்தைமகிழ வாழ்கின்றார். "சிந்தை நிறை மகிழ்ச்சியுடன்", என்பது சேக்கிழார் வாக்கு!

பொன்-போதுமென்ற மனத்தைத் தராது; மேலும் மேலும் ஆசையை வளர்க்கும் இயல்பு, பொன்னின் இயல்பு, ஆனால் ஆரூரர் பொன்னின் மீது ஆசைகொண்டு தேடவில்லை. பரவையார்தம் தொண்டுக்குப் பயன்படவே பொன் விரும்பினார். கிடைத்த அளவில் மன நிறைவு; நிறைந்த சிந்தனை மட்டுமல்ல; மகிழ்ச்சியும் கூட.

இந்த மகிழ்ச்சி ஆனந்தக் களிப்பாக உருக்கொள்கிறது. தணியா ஆனந்தத்தில் தொண்டருடன் கூடிப்பாடுகின்றார். இறைவனையே மையமாகக் கொண்டு வினாக்களைத் தொடுக்கின்றார். இறைவன் திருமேனி வினாக்கள் வழி ஆய்வுப் பொருளாகிறது. ஆரூரர் இறைவனை ஆய்வா செய்கின்றார்! இல்லை, இல்லை! ஒருபோதும் ஆரூரர் ஐயப்பாட்டில் ஈடுபடார்! ஆய்வும் செய்யமாட்டார்! கண்டு அனுபவித்தவைகளை மீண்டும் மீண்டும் ஆர அனுபவிக்கும் எண்ணத்தில் வினாக்கள் எழும்! மற்றவர்களுக்கு அறிவுறுத்தவும் வினாக்கள் எழும். இது மட்டுமா? தம்மை உடையானின் புகழை மற்றவர் சொல்லக் கேட்பதிலே தோன்றும் மகிழ்ச்சிக்கு ஈடில்லை. சொல்லிக் கேட்கப் பெறுவதே புகழ்! அதனாலேயே வள்ளுவமும் 'கேட்ட தாய்' என்று கூறியது! அதனால் அடியார்கள் பலர் கூடி இறைவன் பெருமைகளைத் தம்முள் சொல்லியும் சொல்லக் கேட்டும் மகிழ்வது அடியார்களின் இயல்பு. நம்பியாரூரர் தமது வினாவைத் தொடங்குகின்றார்.