பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இத்தகைய நெறிகண்ட இந்த நாட்டில்தான் பெண் இரண்டாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாள். அது மட்டுமா? வலிமைமிக்க ஆணை இன்று பெண் சுமக்கின்றாள். வரதட்சணைக்கு என்ன பொருள்? பெண், ஆணுக்குப் பொருளாதாய வாழ்வும் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறாள். பல வீடுகளில் பெண் உழைத்தே ஆண் சாப்பிடுகின்றான். இது கேவலம் இல்லையா? பெண்மை, பெண்மையாகவே பேணப் பெறுதல் வேண்டும். குழையணிந்த காதினையுடைய இறைவன் ஊர்ந்து வரும் எருது இளமையுடைய ஏறு! ஏறு-உழைப்பின் சின்னம். இறைவன் திருநீறணிந்த திருமேனியுடையவன். இறைவன் கடையூழிக் காலத்தில் இன்ப வெறிக் கூத்தியற்றிப் படைப்பைச் செய்கின்றான். அப்படி ஆடும் பொழுது ஏற்படும் புழுதியே இறைவன் திருமேனியில் படிந்து திருநீற்றுக் கோலம் தருகிறது. திருநீற்றுக் கோலம். 'அழி வின்மையை நினைவூட்டுகிறது. அழிவிலாதன எல்லாம் தூய்மையானவை என்ற படிப்பினையையும் தருகிறது. இறைவனை நமக்குத் தலைவன் என்று ஆரூரர் அருளிச் செய்துள்ளார். இந்த உலகில் பலர், பலரைத் தலைவர் என்று கூறுகின்றனர். ஆதலால் இறைவன் ஒருவனே நமக்குத் தலைவன் என்று அருளிச் செய்துள்ள பான்மையை அறிக.

ஆவணங் காட்டி ஆட்கொண்டவன்

திருவாரூரில் மகிழ்வோடு வாழ்ந்திருந்த ஆரூரர், மற்ற தலங்களிலும் எழுந்தருளியுள்ள இறைவனைத் தொழ எண்ணி யாத்திரையைத் தொடங்குகிறார். ஆரூரருக்கு ஆன்மநாயகர் ஆரூரில் எழுந்தருளியுள்ள புற்றிடங் கொண்டா ரேயாம். ஆதலால் புற்றீசரிடம் அருள்விடை பெற்றே மற்ற திருத்தலங்களுக்குப் பயணம் மேற்கொள்கின்றார். ஆரூர ருடன், ஆரூரருக்குப் பணி செய்யும் ஏவலர்களும் உடன் வருவதைப் "பரிசனமும் உடன்போத" என்றருளிச் செய்து