பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

263


விளக்குகின்றார். ‘பரிசனமும் உடன் வருவதை’ விதந்து கூறியது உலக வாழ்க்கையில் முற்றும் சிறந்த துணையாக அமையும் ஏவலர்கள் அமைவதில்லை என்பதை உணர்த்தவே! அதனாலேயே ஆரூரருக்கு இறைவனே தண்ணிரும் சோறும் தர வேண்டி வருகிறது; திருவிளமர் திருப்பள்ளி முக்கூடல் முதலிய திருத்தலங்களை வணங்கிக் கொண்டு திருநள்ளாறு சென்றடைகின்றார்.

திருநள்ளாறு நம்பிக்கை ஊட்டக்கூடிய திருத்தலம்; அரசன் நளனைப் பற்றிய துன்பம் விலக்கிய திருத்தலம்; இன்றும் துன்புறுவோர் நம்பிக்கையுடன் வழிபடும் திருத்தலம். திருதள்ளாற்றில் சுந்தரர் சிலநாள் தங்கி வழிபட்டார். திருநள்ளாற்றுப் பதிகத்தில் ஆரூரர் தமது வரலாற்றையே அகச் சான்றாக வைத்துப் பாடுகின்றார்.

"கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
        காம கோபனைக் கண்ணுத லானைச்
சொற்ப தப்பொருள் இருள் அறுத் தருளுந்
         தூய சோதியை வெண்ணெய் நல்லூரில்
அற்புதப் பழ ஆவணங் காட்டி
       அடியனா என்னை ஆளது கொண்ட
நற்ப தத்தைநள் ளாறனை அமுதை
       நாயி னேன்மறந் தென்நினைக் கேனே!"

(ஏழாம் திருமுறை 68-6)

என்பது ஆரூரர் திருப்பாடல்.

ஆரூரர் வாழ்ந்தவர்; வாழ ஆசைப்பட்டவர்; ஆரூரரது ஆசைகள் தீர அள்ளிக் கொடுத்தவன் இறைவன். ஆதலால் "கற்பகம்” என்றார். பொன் எண்ணிக் கொடுத்தால் போதாது. அள்ளிக் கொள்ளும் மலை என்ற கருத்தில் "கனகமால் வரை” என்றார். காமத்தைக் கடிந்த நெற்றிக் கண்ணுடைய தலைவன். சங்க காலத்தில் காமம் என்பது மங்கலச் சொல். காமம்-விருப்புறுதல். வாழ்க்கையை இயக்கும் விசையே