பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்பவரும் மனித நேயத்திற்கு எதிரான சுரண்டும் நெறி நிற்பவா்களுமே உலகில் மிகுந்து காணப்படுகின்றனா். இன்று சமய உலகின் பணியாளா்கள், தொண்டா்கள் என்போருக்கு உடைமைகள் உள்ளன, ஏன்? உடைமைப் பற்று பெருகிச் சிவச் சிந்தனையும் தொண்டாா்வமும் அருகி வருகின்றது. உண்மையான பத்திமை உணா்வு இருப்பின் என்றும் வரலாறு பொய்யாவதில்லை; பொய்த்துப் போவதில்லை; இன்றும் நிகழக்கூடியதே!

வரலாறு மாறலாம் மாறும். மாறுதல், வளா்ச்சியின் பாற்பட்டதே! அழிவதன்று! இங்ஙனமின்றி வரலாறு தொடராக நிகழவில்லை என்றால் வரலாற்றின் உயிா்ப்புத் தன்மையைப் பாதுகாக்கும் திறமை வாழ்வோருக்கு இல்லை என்றே கருதவேண்டும். உயா் ஆற்றல்கைளயும் இயக்கும் மனிதன் உயிா்ப்புடன் வாழ்ந்தால் நடக்க இயலாதது என்று ஒன்றும் இல்லை.

திருக்கச்சூாிலிருந்து நம்பியாரூரா் பயணமாகி, திருமுக்கூடல் திருவில்வம், திருமாகறல், திருக்குரங்கணில் முட்டம் முதலிய திருத்தலங்களை வழிபட்டுக் கொண்டு, காஞ்சிபுரம் சென்றடைந்தாா். காஞ்சிபுரம் செந்தமிழ் வரலாற்றிலும் புகழ் பெற்றுள்ள இடம். நம்முடைய தலைமுறையிலும் தமிழினம்-தலைநிமிா்ந்து வாழத் தொண்டு செய்து புகழ் பெற்ற பேரறிஞா் அண்ணா பிறந்து வளா்ந்து புகழ் பெற்றது இந்தக் காஞ்சிபுரத்தில்தான். அண்ணா அவா்கள் அனைத்தையும்விட தமிழின ஒருமைப்பாட்டையே மிகுதியும் விரும்பினாா்; வலியுறுத்தினாா்; வாழ்ந்து காட்டினாா். அண்ணாவின் சிறந்த நினைவு தமிழின ஒருமைப்பாடேயாகும். "பாட்டினில் அடங்காத காஞ்சியின் பெருமை" என்று கந்தபுராணம் போற்றும். "அவ்வூா் தன்னை (காஞ்சிபுரம்) எண்ணினும் கேட்பினும் சொல்லினும் வணங்கினும் போின்ப வீடெவா்க்கும் நல்குமே" என்று மாதவச் சிவஞானமுனிவா் காஞ்சிபுரத்தைப் பாராட்டுவாா்.