பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி 299


சிவானுபவத்தின் வசப்பட்டு அன்பு மீதுார விளங்கியது. திருவொற்றியூரிலேயே தங்கி, காலந்தோறும் வழிபட்டு வந்தார். திருவொற்றியூரிலேயே தங்கியருளினார்! இறைவனுக்கு ஏற்ற இடம் திருவொற்றியூரே என்று அருளிச் செய்துள்ளார். திருவொற்றியூரில் இரண்டு பதிகங்கள் அருளிச் செய்துள்ள பான்மையை அறிக

திருவொற்றியூர் திருத்தலத்தில், நம்பியாரூரரின் வரலாறு வளர்கிறது; ஒரு திருப்பு மையத்தைப் பெறுகிறது. திருவொற்றியூரிலிருந்து தான் சுந்தரரின் வாழ்வு தொடர்கிறது என்று சொல்லும் அளவுக்கு நிகழ்வுகள் அமைந்துள்ளன.

ஒற்றியூரில் சங்கிலியார்

நம்பியாரூரரின் வரலாறு திட்டமிட்ட வரலாறு என்பதை உணர்தல் அவசியம். திட்டமிட்டதில் சாதி, குல அமைப்பு மரபுகள் பின்பற்றப்படாமையால் பழையன கழிதல் வேண்டும், புதியன புகுதல் வேண்டும் என்ற நியதியே நம்பியாரூரரின் வரலாற்றுக்கு நோக்கம் என்பது தெளிவு.

அமரர் உலகத்து அநிந்திதையார் திருஒற்றியூரில் நாலாம் குலத்தில் திருவவதாரம் செய்தார் என்பது சேக்கிழார் வாக்கு. நாலாம் குலம் எது? பிராமணர், கூத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய குலமரபுகளையே இன்று பலரும் எண்ணுகின்றனர்; எழுதுகின்றனர்; பேசுகின்றனர். பிராமணர் முதலிய நான்கு வருணம் ஆகிய மரபு, அயல் வழக்கு தமிழ்மரபன்று தமிழர் நெறியும் அன்று. இங்கு சேக்கிழார் "நாலாங்குலம்’ என்றது தமிழ்மரபு வழியிலேயேயாம். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைக் குலமே தமிழ்மரபு அநிந்திதையார் நாலாவது குலமாகிய வேளாண் மரபில்-குலத்தில் வந்துதித்தார். -