பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எழுந்தருளியிருக்கின்றான் என்பதே கடவுட் கொள்கை; தத்துவம். கருவறையை விட்டு மகிழின் கீழ் இருக்க இறைவன் ஒருப்பட்டால் கருவறையில் கடவுள் இல்லையா? இது தத்துவமுரண்பாடு இல்லையா? தத்துவ முரண்பாடு இல்லை. மின்விளக்குகளின் பிளக்கில் மின்சாரம் இருக்கிறது. ஆனாலும் பொத்தான்ை அழுத்தினால்தான்் மின்சாரம் இருப்பது காட்சிக்குப் புலனாகும். வான்வெளியில் ஒலியலை இருப்பது உண்மை. ஆனாலும் வானொலிப் பெட்டியை இயக்கினாலே ஒலி செவிப்புலன் நுகர்வுக்கு வரும். அது போல எல்லா இடத்திலும் இறைவன் இருப்பது உண்மை; ஆயினும் ஆன்மாக்களின் அனுபவத்திற்கு வராமல் உள்ளீடாக இருக்கும். திருக்கோயில் கருவறையில் எழுந்தருளி யுள்ள திருமேனியில் இறைவன் பலகாலும் பலரும் அரற்றி அழுதமையால் எப்போதும் வெளிப்பட்டு நிற்பான். வானொலி நிலைய ஒலிபரப்பு அறைக்குள் ஒலி நிறைந் திருப்பது போல, மின்சார உற்பத்தி கேந்திரத்தில் இடையீடில் லாது மின்சாரம் ஒளிபரப்புவது போல. ஆதலால், சுந்தரர் ஆன்மாக்களுக்கு எளிதில் அனுபவத்திற்கு வரும் திருக் கோயில் கருவறையை விட்டு மகிழின்கீழ் இருக்கும்படி இறை வனைக் கேட்டுக்கொண்டார். ஆனால் இறைவனே நம்பியாரூரரை வல்வினைகளுக்கு ஆட்படுத்தி அவரிடம் தோழமைப் பண்பினைத் திறம்பட வளர்க்கத் திருவுளம் கொண்டு சங்கிலியாரிடம் உள்ளதைக்கூறி மகிழின்கீழ் சத்தியம் செய்யும்படி கேட்குமாறு தூண்டினார்.

மகிழின் கீழ் எழுந்தருளியுள்ள இறைவன் முன்னிலை யில் நம்பியாரூரர் சத்தியம் செய்தமையை, சங்கிலியார் நினைத்து வருந்துகின்றார். திருக்கோயில் இறைவன் முன்னால், இறைவன் பெயரால் சத்தியம் செய்வது மரபன்று. ஏற்றுக்கொள்ள இயலாது என்பது தமிழ்நூற் கொள்கை தமிழ்மரபு இது என்பதால் சட்டமன்றங்களில் கடவுள் பெயரால் உறுதியெடுப்பது விரும்பத்தக்கதன்று. அரசியல்