பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

309


கண் பெற்றார் சுந்தரர்!

நம்பியாரூரர் திருவெண்பாக்கத் திறைவரிடம் வேண்டியது கண். ஆனால், அவர் தந்ததோ ஊன்றுகோல்! நம்பியாரூரர் இறைவனின் கருணையை - கருணையின் பற்றா அளவை நினைந்து ஆறுதல் அடைகின்றார். வெண்பாக்கத்திலிருந்து பழையனூர் வழியாகத் திருவாலங் காடு செல்கின்றார். பின், திருவூறல் பணிந்து கொண்டு காஞ்சி மாநகரம் சென்றடைகின்றார்.

காஞ்சிக்கு நம்பியாரூரர் வந்தடைந்ததை'

"தேனிலவு பொழிற்கச்சித் திருக்காமக் கோட்டத்தில்
ஊனில்வளர் உயிர்க்கெல்லாம் ஒழியாத
கருணையினால்
ஆனதிரு அறம்புரக்கும் அம்மைதிருக் கோயிலின்முன்
வானில்வளர் திருவாயில் வணங்கினார்
வன்றொண்டர்’

என்று சேக்கிழார் கூறி விளக்குகின்றார். "தேனிலவு", "காமக்கோட்டம்” இவற்றை அறிந்து மகிழ்க அடுத்து, "ஊனில் வளர் உயிர்கள்” என்றதால் ஊனும் உயிரன்று என்ற கொள்கையை உணர்த்தியவாறாயிற்று. உயிர்கள் வளர ஊனுடம்பு சாதனம்! உயிர்கள் வளர்வதால் ஊனுடம்பு பேண வேண்டியதாயிற்று என்பதை உணர்க! ஊனில் வளர் உயிர்கள் வளர அன்னை காமாட்சி அறம் செய்கிறாள்! அறம் செய்து கொண்டே இருக்கிறாள்!

காஞ்சித் திருக்கோயிலில் அடியார்கள் வழிபாட்டுக்குக் காத்து நிற்கின்றனர். அவர்களுக்குப்பின் நம்பியாரூரரும் நின்று வழிபடுகின்றார்! ஒழுங்கு வரிசை இன்றுவந்ததல்ல. தமிழர்களிடத்தில் பழங்காலத் தொட்டும் இருந்து வரும் முறை.