பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வருகிறார் நம்பியாரூரர். திருமூலட்டானத்திற்கு நம்பியாரூரர் வரும்நேரம், அர்த்தசாம வழிபாட்டு நேரம் ! திருக்கோயில் பூசைகளிலேயே அர்த்தசாம வழிபாடு சிறந்தது! ஏன்? வேண்டிய வேண்டியாங்கு எய்தலால்! அப்பன் அருட் சக்தியுடன் கூடப் போகும் காலம் அல்லவா? நம்பியாரூரர் முன்பு திருவாரூருக்கு வந்த இன்ப அனுபவம் வேறு. இப்போதைய அனுபவம் துன்பம் கலந்தது. கடவுளிடத்து மானிடப்பெண் நயந்த குறிப்புடைய "குருகு பாய” என்று பாடித் தொழுதார். அடுத்து, "மீளா அடிமை” எனத் தொடங்கும் அற்புதமான பதிகத்தைப் பாடியருளினார். இந்தப் பதிகம் ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கும் பதிகம். இப்பதிகத்தில் வலக் கண்ணைத் தந்தருளுமாறு வேண்டுகிறார். நம்பியாரூரரின் ஒருமைநிலை இப்பதிகத்தில் தெரிகிறது. கடவுள் வழிபாட்டுக்கு ஒருமை நிலை வேண்டும். இன்று ஒரு கடவுள், நாளை ஒரு கடவுள் என்று தொழக் கூடாது. இதனை,

"மீளா அடிமை உனக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே."

என்று தன்னிலை விளக்கமாகத் தந்துள்ளார். இந்தப் பதிகத்தில் நம்பியாரூரருக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு புலப்படுத்துகிறது. "வாழப் பிறந்த அடியார்கள் ! உனக்குத் தொழும்பராகத் தொண்டு செய்பவர்கள். அவர்கள் படும் துன்பத்தை வாய் திறந்து உன்னிடத்தில் சொன்னாலும் தீர்வு காண்பதில்லை. சொல்லாமலே உதவிசெய்யக் கடமைப் பட்டவன் நீ! ஆனால், நீயோ சொல்லியும் உதவிசெய்வதில்லை. இதுதான் இயல்பா? நீ மட்டும்தான் வாழ வேண்டுமா? வாழ்ந்து போ! போ” என்று உரிமையோடு ஏசுகிறார்.

அடுத்த பாடலில், "திருவாரூர் இறைவா! நான் விரும்பியபடியே உன்னிடத்தில் ஆட்பட்டேன்! என்னைப் பூரணமாக ஒப்படைத்து விட்டேன்! நீ என்னை விற்க