பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

317


கொண்டார். ஆயினும் தம் நிலையைக் காட்டவில்லை. தம்முடைய தன்னேரிலாத தோழர் நம்பியாரூரர் வேட்கையினால் மனம் வெதும்பித் துன்புறுதலைக் காண விரும்பினார். இதுவும் பெருமானுக்கு விளையாட்டுப் போலும்! ஆதலால், பரவையார் மறுத்த செய்தியை எடுத்துக் கொண்டு நம்பியாரூரரை வந்தணைந்தார்.

நம்பியாரூரர் பரவையாரின் புலவி நீக்கப் பிரானாரை அனுப்பிய செயலை எண்ணி வருந்துகின்றார். ஆயினும் வேட்கை மீதுரத் தலைவன் - பிரானார் பரவையாரின் இசைவு பெற்று வருவார் என்று நம்பிக் காத்திருந்தார். பிரானார் பரவையாரின் மனையில் என்ன செய்திருப்பார்? எந்தை பிரானாரைக் கண்டபின் பரவை மறுக்கமாட்டார். பிரானாருக்கு என்னுடைய தூய அன்பு தெரியும். ஆதலால் பரவையாரின் புலவி தீர்த்தன்றி வரமாட்டார் என்று நம்பியாரூரர்? திடமாக நம்புகின்றார். பிரானார் வரும் வழியில் நம்பியாரூரர் வரவேற்கச் செல்வார். பிரானார் வராமையைக் கண்டு மீண்டு வருவார். அழிந்த நெஞ்சுடன் மயங்கி நிற்பார். சோர்வுடன் நிற்பார். நெற்றிக்கண் உள்ள பிரானார் காலந்தாழ்த்த மாட்டார் என்று மீண்டும் எழுவார். காமவேளின் மலரம்புகளின் தாக்குதலினால் ஒதுங்குவார்; துன்புற்றார்; துயருற்றார்.

பிரானார் பரவையார் இல்லத்திலிருந்து திரும்பும் பொழுது பிரானார் திருக்கோலத்துடனேயே வருகிறார். எங்கு பார்த்தாலும் ஒளிக்கதிர் வீச்சு! இரவு பகல் போலக் காட்சியளிக்கிறது. பிரானாரை நம்பியாரூரர் எதிரணைந்து வரவேற்றார். அணை கடந்த ஆற்று வெள்ளம் போல் பிரானார் முன் சென்றார்; அளப்பில் களிப்புடன் நின்றார்; பிரானாரை வணங்கினார்; புன்முறுவல் பூத்தார். பிரானார் விளையாட்டை உணராத நிலையில் நம்பியாரூரர் பரவையாரிடம் இசைவு பெற்று வந்திருப்பார் என்று நம்புகிறார்.