பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

21


காட்டுகிறார்கள். குடத்திற்குள்ளிருக்கும் நீருக்கும் அதிலிருந்து பிரிந்த ஒரு திவலைக்கும் சுவையில் மாறுபாடு இருத்தற் கில்லை. கடவுளின் நிறைவையும் உயிர்களின் குறைகளையும் ஒப்பு நோக்கிப் பார்க்கும்பொழுது, "அதுவே இது” என்று கூறுவது பயனற்ற கொள்கையாகும். ஆனால், அறிவுக்கு ஒரு சிறிதும் பொருந்தாத இத்தக் கொள்கைதான் இன்று, எடுப்பாரின் உலகியலாற்றல் காரணமாகச் சமூகத்தில் பெருகிக் காணப்படுகிறது. தமிழ்நெறி, உயிர்கள் படைக்கப் பட்டனவல்ல. அவை இறைவனைப் போல என்றும் உள்ள உள்பொருள் என்ற கொள்கையுடையது. சங்க இலக்கியங்கள் உயிரை "மன்னுயிர்” என்றே பேசுகின்றன. மன்னுயிர் என்றால் நிலை பெற்ற அழிவில்லாத என்றுமுள்ள உயிர் என்பது பொருள். அஃதாவது, உயிர்களுக்குத் தோற்றமு மில்லை; அழிவுமில்லை; சார்ந்ததன் வண்ணமாந் தன்மை யுடையன. உயிர்கள் இயல்பிலேயே சிற்றறிவுடையன. ஆனாலும், இயல்பான அவ் அறிவு, இருள்மலத்தொடக்கின் காரணமாக விளக்கமின்றி அறியாமையாய்க் கிடந்தன. ஆனால் அந்த அறியாமை நிலையானதன்று. உயிர்கள் இறைவனோடு தொடர்பு கொள்ளும்பொழுது, அறியாமை அடங்கி அறிவு விளக்கமுற்று உய்திபெறுகின்றன. ஆக இறை, உயிர், தளை என்ற மூன்று நிலையான உள்பொருள்களை மையமாகக் கொண்டு தமிழகச் சமயநெறியின் தத்துவம் வளர்ந்திருக்கிறது. இந்தத் தத்துவப்பார்வை வளர்ந்து வரும் மார்க்சியத்தைக் கூட ஈடுகொடுக்கும் தகுதியுடையதாக இருக் கிறது என்பதை அறிவிக்க உண்மையிலேயே அளவிலாப் பெருமைப்படுகிறோம்.

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும்

இங்ஙனம் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து வந்த திருமுறைக்காலம் சமயநெறியின் பொற்காலமாகும். இல்லை, தமிழகத்தின் பொற்காலமாகும். இல்லை, மனித உலகத்திற்கே