பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணம் மக்கள் காப்பியம்; வாழ்க்கை நூல்! கடவுளை வாழ்த்துப் பொருளாக மட்டுமல்லாமல் வாழ்வுப் பொருளாக்கிக் காட்டிய பெருமை சேக்கிழாருக்கே உண்டு. இறைவன், சுந்தரர்-பரவையார் புலவி தீர்த்தருளிய கருணைத் திறனுக்கு ஈடு ஏது? இணை ஏது? பெருமானுடைய கருணைத் திறத்தை வியந்து போற்றிய நிலையில் சுந்தரரும் பரவையாரும் சிந்தை ஒன்றி, உயிர் ஒன்றாகி வாழ்ந்தனர். இறைவன் இங்ஙனம் எளிவந்த கருணையுடன் துது நடந்தமையைத் தீவிர பக்தர்கள் ஏற்பார்களா? 'புனிதம்' என்ற பெயரால் சமூகத்திலிருந்து கடவுளை விலக்கி வைப்பவர்கள் அன்றும் இருந்துள்ளனர். இன்றும் உள்ளனர். சமூகத்திலிருந்து விலகுவதுதான் புனிதம் என்றால் அந்தப் புனிதம் எதற்காக? அந்தக் கடவுள்தான் எதற்காக?

சுந்தரருக்காக, அதுவும் ஒரு பெண் பொருட்டு, இறைவன் திருவாரூர்த் தெருவில் கழுகுகளும் உறங்கும் நள்ளிரவில் நடந்து உழன்ற செய்தியை ஏயர்கோன் கலிக்காமர் என்பவர் தாங்கிக் கொள்ள இயலாமல் பொருமினார்; ஆத்திரப்பட்டார். எந்தக் காரியத்திற்கு இறைவனைத் தூதனுப்புவது? இதற்கு நெறிமுறை இல்லையா? ஒரு பெண்ணின் புலவி தீர்க்க, இறைவனைத் தூதனுப்பிய சுந்தரரும் தொண்டர்தானா? ஐயோ, பாவம் ! தாங்கிக்கொள்ள இயலாத பிழையை, செவியால் கேட்ட பிறகும் ஏன் நான் சாகவில்லை? என்றெல்லாம் வெகுண்டு பேசுகிறார் கலிக்காமர். "அடியார் துன்பம் பொறாமல் இறைவன் எளிவந்தாலும் இறைவனைத் தூது அனுப்பலாமா? கொஞ்சமும் மனநடுக்கமின்றி இந்தப் பாவச் செயலைச் செய்தவனை நான் என்று காண்பேன்? ஒரு பெண்ணின் பொருட்டு-காமத்தால் தூண்டப் பெற்று ஆளுடைய சிவனைத் தூதனுப்பியவனை நான் நேரில் காண்பேனாகில் விளைவது வேறு" என்று வெகுண்டார்.