பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இல்லை. மேலும் சினம் வளர்கிறது. நம்பியாரூரரைக் காணவும் அவர்வழி சூலை நோய் தீர்தலையும் கலிக்காமர் விரும்பவில்லை. சூலையால் வருந்தும் குடலைக் கிழித்துக் கொண்டார். உயிர்ப்போராட்டம் வந்துவிட்டது. கலிக்காமரின் மனைவி கலிக்காமரின் உடலை ஓரிடத்தில் பத்திரப்படுத்திவிட்டு நம்பியாரூரரை முறையாக வரவேற்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார். துக்கமும் துயரமும் நிறைந்த நிகழ்ச்சிகளைக் கூட மறந்துவிட்டு அல்லது தாங்கிக் கொண்டு, அடியார்களை வரவேற்று உபசரிக்கும் பண்பு மேவி வளர்ந்திருந்தமையைப் பெரியபுராணத்தில் பல வரலாறுகளில் காணமுடிகிறது.

நம்பியாரூரர் கலிக்காமர் இல்லம்வந்து சேர்ந்தார். கலிக்காமரை வருத்தும் சூலையிலிருந்து மீட்டு அவருடன் தங்கியிருக்க விரும்புவதை நம்பியாரூரர் புலப்படுத்துகின்றார். கலிக்காமரின் மனைவி "தீதிலர்; பள்ளிகொண்டுள்ளார்" என்கிறார். திதிலையானாலும் நம்பியாரூரர் மனம் தெளிவு கொள்ளவில்லை. கலிப்பகையாரைக் காண விரும்புகிறார். கலிக்காமர் கிடத்தப்பட்ட இடத்திற்கு நம்பியாரூரர் அழைத்துச் செல்லப்பெறுகிறார். அங்கு கலிக்காமர் இரத்தம் சொட்டச்சொட்ட உயிர் பிரிந்த பிணமாய் கிடந்ததைக் கண்டார். கலிக்காமர் நிலையைக் கண்ட நம்பியாரூரர் தம்மை மாய்த்துக்கொள்ள முற்படுகின்றார். கலிக்காமர் உடலிற் கிடந்த வாளினை எடுத்துத் தமது உடம்பில் பாய்ச்சிக் கொள்ள நம்பியுர்ரூரர் முயன்றபோது ஆளுடைய சிவத்தின் அருளால் கலிக்காமர் எழுந்து நம்பியாரூரர் கையிலிருந்து வாளைப்பிடுங்கி, நம்பியாரூரரின் தற்கொலை முயற்சியைத் தடுக்கின்றார்; வன்தொண்டர் வீழ்ந்து வணங்குகின்றார். கலிக்காமரும் வணங்குகின்றார். நம்பியாரூரரும் கலிக்காமரும் இடைவிடா நண்பராயினர்.