பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருநாவுக்கரசு சுவாமிகள் திருநாளில் திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்வித்துத் திருக்கோயில்களைப் பேணியும் துய்மை செய்வித்தும், உருத்திர பசுபதி நாயனார் திருநாளில் அடியார்களுக்கு உடைகள் வழங்கியும் இன்னும் பல நாயன்மார்களின் தொண்டு நெறிகளைச் செயல்முறைப் படுத்தியும் வந்திருப்பது தமிழ்நாடு அறிந்த செய்தியே.

தொண்டு நெறியின் விளைநிலம் சிந்தையே, துயசிந்தை யுடையவர் என்பதை ஒருவரின் புறச்செயல்களை நோக்கியே அறியமுடிகிறது. தொண்டு, புறத்தில் வெளிப்பட்டு நிற்பது. ஆதலால், தொண்டு நெறியின் பெருமை சொல்லாமலே பெறப்படும். இத்தகு தொண்டு நெறியில் ஈடுபடுவதே உண்மையான சமய வாழ்க்கையாகும்.

இந்த வகையில் தவத்திரு அடிகளார் அவர்கள் சிந்தித்து இந்த (விரோதிகிருது) ஆண்டு மகா சிவராத்திரி நாளில் அறுபான்மும்மை நாயன்மார்களின் தொண்டுகள் அனைத்தையும் நடைமுறைப் படுத்தத் தக்கவாறு இந்த அரிய திட்டத்தை உருவாக்கினார்கள். இத்திட்டம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்-ஐந்து கோவில் தேவாலயங்களில் நடைமுறைப் படுத்த உருவாக்கியதாகும். எனினும், தமிழகம் முழுவதிலுமுள்ள திருக்கோயில்கள்-திருமடங்கள் இதனை ஏற்றுச் செயல்படுத்துவது நாடு தழுவிய நலத்தினை விளைவிக்கும். இந்த நோக்கத்துடனேயே இது, புத்தக வடிவமாக வெளியிடப் பெறுகிறது. திருக்கோயில்களின் அறங்காவலர்கள், இறைபணியாளர்கள், பெரியோர்கள் சமயத் தொண்டர்கள், அன்பர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் கண்டுள்ள பணிகளை மேற்கொண்டு நம் சமயத்திற்கும் சமயவழி மேற்கொண்ட மக்களுக்கும் தொண்டுசெய்து, இறைவன் திருவருட் பேற்றினை எய்தி இன்புற வேண்டுகின்றோம்.

'குன்றக்குடி,

பதிப்பாசிரியர்.

11–3–1972