பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொற்காலம் எனலாம். ஏழாம் நூற்றாண்டில் ஞாயிறும் திங்களுமென இரண்டு ஞானஒளிக் கதிர்கள் தமிழகவானில் நடமாடின. ஞாயிறனைய ஞானசம்பந்தரும், திங்களனைய திருநாவுக்கரசரும் அவதரித்து, மனித உலகத்தின் நாகரிகத்தைக் காத்தமையை எங்ங்னம் வாழ்த்துவது! திரு வருளால் ஞானசம்பந்தர் தோன்றியிராது போனால், இசையும் கலையும் ஏது? உயிர்களை அன்பில் தோய்த்து வளர்க்கும் காதல் மனையற வாழ்க்கை ஏது? உலக உயிர்களின் வரலாற்றுத் தொடர்ச்சிக்குத் தொண்டுசெய்யும் தாய்க்குலத்தின் பெருமை ஏது? இயற்கையோடியைந்த வாழ்வு ஏது? இன்பம் ஏது? இவையனைத்தையும் மறைத்து வாழ்க்கையை வறண்ட பாலைவன மாக்கும் புறநெறிகள் தலையெடுத்தபோது ஞானத்தின் திருவுருவமாக எழுந் தருளிய திருஞானசம்பந்தர் அயல்வழக்கை வென்று, தமிழ் வழக்கை நிலைபெறச் செய்து மன்னுயிர்க்கு வாழ்வளித்தார். மனிதகுலத்தின் உரிமையை முடக்கி அடிமை கொண்ட முடியரசை, உலகினர் அஞ்சியடங்கி உச்சிமேற் கொண்டு பாராட்டிக் கொண்டிருந்தபோது அப்பரடிகள்,

      "நமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
          நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம்
      ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
          இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
      தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
          சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
      கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
          கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே
"

என்று முழங்கி முடியாட்சிக் கொள்கைக்கு எதிராக வீரக்குரல் கொடுத்தார். உலக நாடுகளில், "அரசனது ஆணை தெய்வத்தின் ஆணை” என்ற கொள்கை நிலவியபொழுது