பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

23


அப்பரடிகள், அரசின் ஆணையைத் துச்சமெனத் தூர எறிந்தார்! ஆள்கிறவன் - ஆளப்படுகிறவன் என்ற வேற்றுமையைக் களைய முதன்முதலில் வித்திட்டவர் அப்பரடிகளே! அதற்குப்பிறகுதான் அமெரிக்க விடுதலைப் புரட்சி. பிரஞ்சுப் புரட்சி! மனித உலகத்தின் உரிமை விளக்கை முதன்முதலில் ஏற்றித் தந்தவர் அப்பரடிகளேயாம். தமிழ்மறை அருளிச்செய்த திருமூலர், "ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்” என்றார். ஆயினும், தமிழ் நெறிக்கு ஒவ்வாத சாதி வேற்றுமைகள் எப்படியோ தமிழகத்தில் கால் கொண்டன. அதனால், எண்ணத்தொலையாத சாதிகள் தோன்றி வீட்டிலும் வீதியிலும் வளர்ந்து வெறுப்பை வளர்த்துப் பகை நெருப்பை மூட்டின. இந்தத் தீமை வீதியோடு நிற்கவில்லை. எல்லா உலகுக்கும் ஆதியாய், பொது வாய், நடுவாய், எங்கணும் நிறைந்திருந்து அருள் வழங்கும் அம்மையப்பன் ஆலயத்துக்குள்ளும் புகுந்து புல்லுருவியென வளர்ந்தது; இறைவன் பெயராலும் சாதிகள் வளர்க்கப் பெற்றன; அரண்செய்யப் பெற்றன. இறைவனுக்குப் பூசனை பண்ணும் உரிமை-திருவமுது படைக்கும் உரிமை அகனமர்ந்த அன்பினராகித் தொழும்பாய் அடிமை பூண்ட அடியார்க் கல்லாமற் பிறப்பின்பாற்பட்ட ஒரு சாதியின்பாற் படுத்தப் பெற்றன. அதன் காரணமாகப் "போதொடு நீர்சுமந் தேத்தி" வழிபடும் புண்ணிய சீலர்கள் அருகிப்போயினர். இந்தக் கொடுமையை அருள்பழுத்த நெஞ்சினராகிய அப்ப ரடிகளும் தாங்க முடியாமல் சாதி வேற்றுமைகளைப் பொய் புனைந்து கட்டிய புரை தீராச் சாத்திரங்களைக் காட்டி நிலைநிறுத்த முயல்பவர்களைச் "சழக்கர்காள்!” என்று சாடுகின்றார். சழக்கர் - முறைகேடர்.

      "சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
      கோத்தி ரமுங்குல முங்கொண் டென்செய்வீர்
      பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
      மாத்தி ரைக்குள் அருளு மாற்பேறரே.”

—5. 60-3