பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"மெய்யடியார்களுக்கு வேண்டும் பணிசெய்யும்" நெறியில் நின்றொழுகியவர்: "வையகம் போற்றும்படி மனையறம்" மேற் கொண்டு வாழ்ந்தவர்; "சைவமெய்த்திருவின் சார்பே"சார்பெனக் கொண்டொழுகியவர்; ஆயினும் "இளமை மீதூர இன்பத்துறையினில் எளியரானார்". ஆனாலும், கற்பும் பொற்பும், கடவுட் பற்றும், கணவரையும் திருத்தும் கடமை யும் உரிமையும், தகை சான்ற சொற்காக்கும் தன்மையினு நீங்காத அவர் தம் மனைவியின் ஆணைக்குப் பின்பு, எந்த இன்பத் துறையில் எளியராக முன்பு விளங்கினாரோ, அந்த இன்பத் துறையை முற்றிலும் மறந்து, மனையில் தங்கியொழுக அவரால் முடிந்ததென்றால் அவர் தம் குறை, குறையாகவே தெரிவதற்கில்லை.

வாழ்க்கை, பெரும்பாலும் இயற்கையோடியைந்தது. இயற்கையோடியைந்த இனிய செயல்களைக் கூடப் பலர் செய்ய முடியாமல் அல்லற்படுகிறார்கள்! இவறிக் கூட்டுதல் செயற்கைப் பண்பே. ஈத்துவத்தல் இயற்கைப் பண்பே. துன்பம் விளைத்தல் செயற்கைப் பண்பே. துன்பகற்றி இன்பம் விளைத்தல் இயற்கைப் பண்பே. நன்றிமறத்தல் செயற்கைப் பண்பே. நாளும் நன்றியறிதல் இயற்கைப் பண்பே. ஆயினும், இங்குக் கூறிய இயற்கைப் பண்புகள் மன்பதையுலகில் விளங்கித் தோன்றுதல் அருமையாகவே இருக்கிறது. செயற்கைப் பண்புகளே விஞ்சி, எங்கும் துன்பத் தொடக்குகளையே பார்க்கிறோம். ஆனால், இயல்புக்கு மாறான எவரும் செய்ய இயலாத அதீத ஒழுங்குகளையும் ஏற்றுக்கொண்ட அடியார்களையும் பெரியபுராணத்தில் பார்க்கிறோம்.

இயற்பகை நாயனார் வரலாறு, இதற்கோர் எடுத்துக் காட்டு. ஈதலைக் கடமையாகக் கொண்டாலும் அதற்கோர் . உலகியல் வரையறை உண்டு. அதுவே உலகத்தியற்கை ஆனால், இயற்பகையார் வரையறைக்குட்படாத ஈதற் பெருங்கொள்கையை வாழ்க்கையின் நோன்பாகக் கொண்டார். இதனை,