பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நோக்கம் பற்றியும் ஆராய்தல் வேண்டும். இன்றைய தீங்கியல் சட்டம் கூட, ஒருசெயல் தீங்கெண்ணத்துடன் (Malice) அல்லது நேர்மையற்ற நோக்கத்துடன் (Improper motive) செய்தால்தான் குற்றம் என்று கருதுகிறது. வந்தவர் கேட்பதற்கு முன்பேயே திட்டமிடுவதையும் அத்திட்டத்தின் நோக்கத்தையும் சேக்கிழார் காட்டியுள்ளார். அதன்படி மனைவியைக் கேட்டதில் கேட்டார்க்கு நேர்மையற்ற நோக்கமோ, தீங்கெண்ணமோ இல்லையென்பது வெளிப்படை இரந்து கேட்டதன் நோக்கத்தை,

"தொண்டர்மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்"
(4)

என்று சேக்கிழார் அவ்வாய்மை தோன்றப் பாடுகின்றார். இயற்பகையாரின் மனைவியை வந்தவர் இரந்து கேட்டதன் நோக்கம் இயற்பகையாரின் இல்லையெனாது கொடுக்கும் திறத்தை அறிந்துகொள்ளக் கூட அன்று, உலகிற்கு அவர்தம் கொள்கையின் உறுதிப்பாட்டைக் காட்டவேயாகும். அஃதாவது, இயற்பகையாரின் கொடைத்திறத்தினை உலகிற்கு உணர்த்தவேயாம். இச்செயல் முடிந்தவுடன் அஃதாவது இயற்பகையார் மறுக்காமல் அவருடைய மனைவியைத் தந்தவுடன் இச்சோதனை முடிந்துவிடுகிறது. அங்கே வேறு தவறான பொருள் கற்பிக்க இடமில்லை; ஏதுவுமில்லை. ஆனால், சிலர் இந்த அருமைப்பாட்டினை அறிய முடியாமல் இந்தப் பண்பினைத் துய்த்துணரும் தாய அனுபவமில்லாமல் தவறாக எழுதியும் பேசியும் வருகிறார்கள்! இயற்பகையார் கொடுத்த வாக்குறுதியின்படி மனைவியைக் கொடுக்கின்றார். சிலமணித்துளிகளிலேயே இறைவன் மறைகின்றான்! உலகு உணர்கிறது, இயற்பகையார் கொடைத்திறத்தை!

இங்ஙனம், சேக்கிழார் எடுத்துக்காட்டும் நாயகர்கள் குறிக்கோளுடையவர்கள். அக்குறிக்கோளை நெஞ்சில்