பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மெய்ப்பொருள் நாயனாருக்கு வந்த தீங்கு அவருக்கேயாம். ஆங்கு, அவருடைய பொறுத்தாற்றும் பண்பே அறம். சண்டீச ரின் வெகுளியைச் சேக்கிழார் வாழ்த்துகிறார். சண்டீசர் வரலாற்றில் சண்டீசருக்குத் தீங்கு வரவில்லை. சண்டீசரின் தந்தை அவரைத் திட்டி மொத்தியபோது பொறுத்தாற்றும் பண்பே மேற்கொண்டார். ஆனால், கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டு முன்னைப் பழைமைக்குப் பழமையாய், எல்லார்க்கும் முன்னே முளைத்ததாய், தமிழக வரலாற்றின் மையமாக-தமிழினத்தின் வழிபாட்டுச் சின்னமாய் விளங்கிவந்த சிவலிங்கத் திருமேனியைத் தீண்டிச் சிதைக்க முனைந்தமையைச் சண்டீசரால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. அதனால் வெகுண்டு, பெற்ற தாதையின் தாளைத் தடிந்தார். தனி மனிதர்கள் வரலாம், போகலாம். ஆனால், ஒரு நாட்டின் வழிவழி வளர்ந்து வரும் நாகரிகம் தனி மனிதரினும் விழுமியது; பெரியது. தனி மனிதர் தம்மை இழந்தாவது அந்த நாகரிகத்தினைக் காப்பாற்ற வேண்டும். இதுவே, வாழ்வாங்கு வாழ்பவரின் சீலம், இன்றோ, நம்மில் பலருக்கு 'நாமே ' தான் பூதாகாரமாக வளர்ந்திருக்கிறது. 'நம்முடைய ஏற்றமும் இழிவுமே முதனிலைப் படுத்தப்படு கின்றன. வழிவழி வளர்ந்துள்ள நெறிமுறைகளில்-நாகரிகப் பண்பில் நமக்கு ஊற்றமில்லை. அவற்றைப் பேணி அரண் செய்து காக்க வேண்டுமென்ற பெருவிருப்பமில்லை. ஆனால், ஆண்டின் இளையராகிய சண்டீசருக்கிருந்த நெறிமுறைப் பிடிப்பை நாம் அனைவரும் பின்பற்றி ஒழுகவேண்டும்.

சேக்கிழார் காப்பியத்தில் ஆண்டில் இளையருண்டு. ஆனால், ஞானத்தில் இளையர் யாருமிலர். அப்பூதியடிகளின் அருமந்த புதல்வன் மூத்த திருநாவுக்கரசை-அவன்றன் பண்பை எங்ங்ணம் எடுத்துக் கூறுவது? அப்பரடிகளுக்கு அமுது படைக்க இலை அரிந்து வரும்படி ஆணை தருகிறார் அன்னை அத்தர். வேடிக்கை பார்க்கும் வயதுடைய சிறுவன் விரைந்து ஒடுகிறான். அவர்தம் ஆணைக்காக ஓடாமல், அவ்-