பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப் பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் மேவினார்"

(181)

என்றருளிச் செய்துள்ளார். ஆதலால், தவம் அடிப்படைத் தளமாகிய மனையறத்திலும் நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிப்பதே பெரியபுராணம்.

திருநீலகண்ட நாயனார் அவர்தம் அருமை மனைவி யுடன் நிகழ்த்திய மனையறம் பேரறம் மட்டுமன்று; பெருமைக்குரிய பெருந் தவழுமாகும். கணவன் மனைவிய ரிடையே உளங் கலந்த உறவு. தேவை. அவர்களது உறவு முறையில் சிக்கல்கள் தோன்றலாம். ஆனால், அந்தச் சிக்கல்களை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர் நுழைவுக்கு இடமில்லை. அங்ங்ணம் அமையும் மனை வாழ்க்கையே பொற்புடைய புனித வாழ்க்கை! அதனா லன்றோ, வாழ்க்கைத் துணை நலம் வகுத்து வள்ளுவம்,

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

(56)

என்று பேசியது. திருநீல கண்டரும் சரி, அவருடைய மனைவியாரும் சரி, அவர்களுக்கிடையே ஏற்பட்ட சிக்கலை முறிவுக்குக் காரணமாக்காமலும் உணர்ச்சி வழிப்பட்ட உறவுக்குத் தடையாக இல்லாமலும் அயலறியா வண்ணம் வாழ்ந்த முறை வியந்து பாராட்டுதற்குரியது.

வேளாண் பெருங்குடியில் தோன்றிய இளையான்குடி மாறனார் முறையாக மனையறம் நிகழ்த்தியவர்; குறைவறச் செல்வம் பெற்றவர்; செல்வத்தின் பயனை, அடியார் பெருமக்களுக்கு மண்டுகாதலொடு அமுது செய்வித்து அனுபவித்தவர். அவர்தம் அருமைப் பத்தினி இந்தப் பணியில் இளையான்குடி மாறனாருக்கு இணைபிரியாத் துணையென நின்றார். இளையான்குடிமாறனாரின் வளம்