பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள் 51


வாழ்ந்த, இல்லை, தவம் செய்த தவஞானச் செல்வர்களின் வரலாற்றை எடுத்துக் கூறுவதால், இஃது உலகப் பொதுச் சமய நூலாகும். எனினும், சேக்கிழாரின் சிந்தைச் சார்பு சிவநெறியிலேயாம். சிவநெறியின் அடிப்படைக் கொள்கைகளைச் சேக்கிழார் விளக்கியே பெரியபுராணம் செய்துள்ளார்.

இதனைச் சாக்கிய நாயனார் வரலாற்றால் நாம் உணர முடிகிறது. சாக்கிய நாயனார், முன்னை நல்லூழின்மையின் காரணமாகச் சிவநெறியிற் பிறக்கவில்லை. ஆயினும், பின்னைப் பெருந்தவத்தால் சிவநெறியே மெய்ந்நெறியென்பதை உணர்ந்துவிடுகிறார். சிவநெறியின் சிறந்த கொள்கையுள் வினைகளைச் செய்கின்ற உயிர்கள் உண்டு; செய்வினையுண்டு; செய்வினையின் பயனுண்டு; அந்தப் பயனை உயிர்களுக்குக் கூட்டுவிக்கும் பரம்பொருளுமுண்டு. இந்த நான்கு வகையாக அமைந்து விளங்கும் மெய்ந்நெறியாகும் சிவநெறி என்பது சேக்கிழார் கருத்து. இதனைச் சாக்கிய நாயனார் வாயிலாகக் கூறுகிறார் சேக்கிழார்.

"செய்வினையும் செய்வானும் அதன்பயனும்
கொடுப்பானும்
மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக்கொண்டே
இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லையென
உய்வகையாற் பொருள்சிவன்என் றருளாலே
உணர்ந்தறிந்தார்"

(5)

என்பது பெரியபுராணம். ஆதலால், சேக்கிழார் சமயப்பொது நோக்குடையராகத் திகழ்ந்தாலும் சித்தாந்தச் சிவநெறியில் நிலைத்த ஈடுபாடுடையவர்.

சமய நெறியிலும் சேக்கிழார், சடங்குகளை வெறுத்தவரல்லர். ஆனால், சடங்குகளே சமயம் என்ற கருத்துச்