பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 திருமுறைப் பாடல்களைப் பயபத்தியுடன் ஒதித் தெளிந்திருக்கிறார். சமயாசாரியார் மூவரும் தேவாரங்களை அருளிச் செய்த சந்தர்ப்பங்களைச் சேக்கிழார் எடுத்துக் கூறும் பொழுது பக்தியுணர்வின் மெய்ப்பாட்டுடன் கூறுகிறார். நம்மை அந்தந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார். மதுரையில் திருஞான சம்பந்தர் அருளிச் செய்த திருப்பாசுரத் திருப்பாட்டுப் பன்னிரண்டுக்கும் சேக்கிழார் இருபத்துநான்கு திருப்பாட்டுக்களால் தரும் விளக்கம் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது!

சேக்கிழார் திருமுறைப்பாடல்களைத் திருவருள் வெளிப்பாடாகவே கருதினார். திருமுறை ஆசிரியர்களை நிறைமொழி மாந்தரென நினைந்து நினைந்து வாழ்த்துகிறார். அவர்கள் அருளிய பாடல்களை மறைமொழிகளாக - மந்திர மொழிகளாகச் சேக்கிழார் ஏத்திப்போற்றுகிறார். திருமுறைகள் நிகழ்த்திய அற்புதங்களைச் சேக்கிழார் எடுத்து விளக்குவதன்மூலம், திருமுறைகளை வேண்டுவ அனைத்தும் சாதிக்கவல்லன என்ற நம்பிக்கையை நமக்கு வழங்குகிறார். இறைவனைத் திருமுறைத் தமிழால் அருச்சித்து வழிபடுவதும், திருமுறைநெறியில் நின்று ஒழுகுவதும் சேக்கிழாருக்கு நாம் செய்யும் நன்றிக் கடப்பாடாகும்.

திருமுறைகள், திருவருளின்பத்தை மட்டுமே நல்குவன வல்ல; இந்த வையத்து வாழ்வையும் வளமாக்கும். வறுமையில் அல்லற் படுவோர், "இடரினும் தளரினும்” என்று தொடங்கும் பதிகத்தை முறையே யோதி முன்னுவ அனைத்தும் பெறலாம். நாளால், கோளால் நலிவுறுவோர் "வேயுறு தோளி பங்கன்” என்று தொடங்கும் பதிகத்தை நெஞ்சில் நிறையுணர்வுடன் ஒதினால் வெற்றி பெறலாம். முன்னைத் தீவினை வருத்த வருந்துவோர் "அவ்வினைக் கிவ்வினை" என்று தொடங்கும் திருப்பதிகத்தினை ஒதினால் வினைத் துன்பம் நீங்கி இன்புறுவர். உண்டு மகிழ முடியாமல் வயிற்றுத் தொல்லையால் வேதனைப்படுவோர்,