பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மனோபாவத்தையும் பெற முடிகிறது. மனிதகுல வாழ்வுக்கும் வளத்துக்கும் அயராது சிந்தித்த சிந்தனைச் செம்மல்களில்பேராசிரியர்களில் அப்பரடிகள் தொண்ணுாறு விழுக்காடு சமுதாய மலர்ச்சிக்காகப் பாடுபட்டிருக்கிறார்.

தமிழ்ச் சமூகத்தின் மொழிவழி நாகரிகத்தையும் அவர் பேணிக் காக்கப் பெருந்தொண்டாற்றியமை மறக்க முடியாதது. சமணத்தின் நுழைவினால் சைவ சமயமும் தமிழும் குன்றிக் குற்றுயிராகிக் காலப் போக்கில் மறைந்தொழிய ஏதுவாகுமெனக் கருதியே, சமணர்களால் உண்டான இன்னல்களை எல்லாம் எதிர்த்துப் போராடினார்; இசையைத் துய்க்கத் தெரியாத-அனுபவிக்கத் தெரியாத அன்றையச் சமணர்கள், மலரை மணக்காதே என்பதுபோல் இசையைப் பொழியாதே என்பதுபோல் இசையைச் சுவைக்காதே, எனத் தடை போட்டார்கள். தடைவரினும் படைவரினும் தளராது தன்னம்பிக்கையால் உள வலிமையால் இன்னிசை பொழிந்து இசைத் தமிழ் வளர்த்தார் அப்பரடிகள். -

பிறர் நலம் பேணுகின்ற உள்ளத்தினரான அப்பரடிகள் அல்லும் பகலும் அறவாழி அந்தணன் தாளை இறைஞ்சி இறைஞ்சி அவனது ஆன்மாக்களிடத்து அன்புகாட்டி அரும்பாடுபட்டார்.

"தொண்டலாது உயிர்க்கு ஊதியமில்லை"
"என் கடன் பணி செய்து கிடப்பதே"

என்பன போன்ற வரிகள் அப்பரடிகளின் தொண்டுள்ளத்தைத் தெளிவாக்கி நிற்பன. திருமுறைப் பாசுரங்களிலே என்னைப் பிணித்து உருக வைத்தவை மணிவாசகரின் திருவாசக மழையும், திருநாவுக்கரசரது தேவாரத் திருவமுத மழையுமேயாம். நாள்தோறும் நேரங் கிடைக்கின்ற போதெல்லாம் அப்பருடனும் அருண்மணி வாசகருடனும் பொழுதைப் போக்குவதில் பேரின்பமடைகின்றேன்.