பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமுறைகளின் மாண்பு

67


அருட்செல்வர்களாக வாழ வைப்பவை திருமுறைகள். இறையருளால் இன்னல் களைந்து இன்பமடைந்து இறும் பூதடையச் செய்வதோடு சிவனைப் பற்றியும்-சிவனருள் ஆர்ந்த செல்வர்களைப் பற்றியும்-சிவத்தலங்களைப் பற்றியும் தெளியத் திருமுறைகள் உதவுகின்றன.

சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் சைவப் பெருமக் களுக்கு வாய்த்த தெய்வத் தமிழ் வேதமாகும். இறைவன் எல்லா உலகத்திலும் இருப்பவன்; அவனுக்குத் தென்னாட்டிலே அருமையான செல்வப் பெயருண்டு. அதுதான் சிவன் என்பது. "தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கு மிறைவா போற்றி” என்கின்றார் மணி வாசகர். தென்னாட்டிலே சிவனாகக் கருதப்படுகின்ற நமது கடவுள் நாம் வாழ நமக்கு இடையூறாய் இருப்பவைகளைத் தாமே எடுத்துக் கொண்டார். இதிலிருந்து இறைவனின் தாய்மை நிலையை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். பாம்பும், புலித்தோலும் பார்க்குமிடத்து எவர்க்கும் தேவையற்றவை. அவற்றினை அவரே எடுத்துக் கொண்டார். குழந்தையின் நன்மையையும் வளர்ச்சியையும் குறிக்கொண்டு காக்கும் ஒர் உத்தமமான தாய் பத்தியமாக இருப்பது போலவே ஆன்மாக்களைப் பொறுத்தவரை அண்ட சராசரம் அனைத்தையும் ஈன்று புறந்தரும் அன்னையாக ஆண்டவன் இருக்கின்றான், "தாயிற் சிறந்த தயாவான தத்துவனாகவும்", "பால் நினைந்தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிவுடையனாகவும்" இருப்பதை அனுபவத்திலே கண்டு மணிவாசகர் பாடியருளினார்.

இத்தகைய இறையின் இயல்புகளைத் தெளிவாக்கி உலகுக்கு ஒளிபரப்ப எழுந்த சாதனங்களே திருமுறைகள். ஐம்புல வேடர்களின் இயல்புகளைக் குறைத்து-மறைத்து மாண்பார் நிலைக்கு மாந்தரை உயர்த்த உதவுவன நமது சைவத்திருமுறைகள்.