பக்கம்:குப்பைமேடு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

161

'அஞ்சலை என்ற பெயர் எனக்கு உச்சரிக்கப் பிடிக்க வில்லை; அது வீட்டுப் பெயர்; செல்லப்பெயர்; அது அந்த வீட்டில் நெருங்கியவர்கள்தான் கூப்பிட உரிமை உண்டு; நான் எப்படி அந்தப் பெயரில் கூப்பிட முடியும்?

மேலும் அஞ்சலி என்ற அந்தச் சோகப்படத்தைக் கண்டபிறகு, அஞ்சலை, அஞ்சலை என்று கூப்பிடுவது என்றால் சோகம் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தக் குழந்தை செத்தது தெரியாமல் அஞ்சலை அஞ்சலை என்று கூப்பிடுவது நம் நெஞ்சைத் தொடுகிறது தேவை இல்லாமல் அவர்கள் வீட்டில் நுழைவதும் அநா கரிகமாகப் பட்டது.

ஆறுமுகம் எனக்கு வேண்டியவர்தான்; என்றாலும் மணமாகி ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட இளம் பெண்ணி ட ம் வலிய எப்படி நான் போய்ப் பேச முடியும். அதனால் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு 'ஆறுமுகம்' என்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே சென்றேன்.

பானு வீட்டில் இல்லை; அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தாள். பானுவின் தாய் வந்து என்னைச் சந்தித்தார்கள்.

'வாங்க' என்று கூறி வரவேற்றார்கள்.

'பானுவிற்கு அஞ்சல்வழிக் கல்வி நிறுவனத்திலிருந்து, தவறுதலாக எங்கள் வீட்டு முகவரிக்கு இந்தத் தபால் வந்தது. கொடுத்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்' என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/163&oldid=1115618" இலிருந்து மீள்விக்கப்பட்டது