பக்கம்:குமண வள்ளல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

குமண வள்ளல்

படியே வெறுங்கையோடே திரும்பி வந்துவிடலாம். அப்படி வருவது நமக்குப் புதிதல்லவே!’ என்று மனத்துக்குள் ஆறுதல் செய்துகொண்டார்.

எப்படியோ குமணன் இருந்த காட்டைக் கண்டுபிடித்து அவன் இருந்த இடத்தை அடைந்தார். அரண்மனையில் வாழ்ந்தவன் சிறு குடிசையில் வாழ்ந்தான். அவனைக் கண்டு வணங்கினர் புலவர். “நான் ஆவூர் மூலங்கிழாருடைய மகன்; சாத்தன் என்று பெயர்” என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆவூர் மூலங்கிழாரைப்பற்றிக் குமணன் கேள்வியுற்றிருந்தான். “அப்படியா? நான் உங்களைப் பார்த்ததில்லை. நான் காட்டில் வாழ்ந்தாலும் தமிழ்த் தாய் எனக்கு அருள் செய்வதை மறக்கவில்லை. உங்களைப் போன்ற புலவர்களை அவ்வப்போது அனுப்புகிறாள்” என்றான்.

“தங்களைக் காணவேண்டுமென்று முதிரத்துக்குப் போனேன். தாங்கள் இங்கிருப்பதாகத் தெரிந்து இங்கே ஓடி வந்தேன். என் துரதிருஷ்டம் எங்கே போனாலும் என்னைத் துரத்தி வருகிறது. தங்களை முன்பே பார்த்துப் பழகியிருந்தால் என் கலி தீர்ந்திருக்கும். என்ன செய்வது? அவரவர்களுக்குக் கொடுத்து வைத்ததுதானே கிடைக்கும்?”

“நீங்கள் இவ்வளவு தூரம் வருந்துவதைக் கண்டால் உங்களுக்கு ஏதோ துன்பம் இருப்பதாகத் தோன்றுகிறது” என்று அன்புடன் குமணன் கூறவே, புலவருக்கு அடக்க முடியாத் துயரம் உண்டாகிவிட்டது தம்முடைய வறுமை நிலையைச் சொல்ல அது ஏற்ற சமயம் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட அவரால் முடியவில்லை. கீழே விழுந்த குழந்தையைத் தாய் தேற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/100&oldid=1362775" இலிருந்து மீள்விக்கப்பட்டது