பக்கம்:குமண வள்ளல்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாள் தந்த வளம்

95

வந்தால் ஓவென்று அழுவதுபோல, அவர் தம் வறுமை யைப்பற்றிக் கூறிப் புலம்பத் தொடங்கிவிட்டார்.

“எனக்கு ஏதோ துன்பம் இருப்பதாகத் தாங்கள் உய்த்துணர்ந்து சொன்னீர்கள். துன்பம் என்பதற்கு ஒரு வடிவம் உண்டென்றால் அது நான்தான். ஒன்றா, இரண்டா, பல பல துன்பங்கள்.”

“அவ்வளவு தூரம் சோர்வடையாதீர்கள். உலகில் பிறந்தவர்கள் துன்பம் அடைவது இயற்கை. அதற்காக மனம் தளரலாமா? அப்படி என்ன துன்பம் வந்து விட்டது உங்களுக்கு?”

“அப்படிக் கேளுங்கள்; சொல்கிறேன். என் குடிசையில் அடுப்பு மூட்டி எத்தனையோ நாட்கள் ஆயின. போட்ட அன்று எப்படி இருந்ததோ, அப்படியே அது தேயாமல் இருக்கிறது. அதன் மேல் பாத்திரங்களை ஏற்றி இறக்கினால்தானே தேயும்? அதற்குள் நெருப்புக் கொழுந்துவிட்டு எரியவில்லை. காளான் முளைத்திருக்கிறது. என் மனைவி எலும்பும் தோலுமாய் இருக்கிறாள். போதாக்குறைக்கு ஒரு குழந்தை வேறு. அதற்குப் பால் கொடுக்க அவள் உடம்பில் என்ன இருக்கிறது? குழந்தை பசியால் அழ அழ அவளால் பொறுக்க முடியவில்லை. அவளுக்கும் துயரம் பொங்குகிறது; அழுகிறாள். இந்த அவல வாழ்க்கையில் எத்தனை நாளைக்குத் திண்டாடுகிறது? தங்களைப் பார்த்துவிட்டுக் கிடைத்ததைப் பெற்றுப் போகலாம் என்று வந்தேன். என்னுடைய நிலையை அப்படியே எடுத்துச் சொல்வது அரிது. தங்களை வற்புறுத்தி எதையாவது பெற்றுப் போனாலன்றி எனக்கு ஆறுதல் உண்டாகாது.” [1]


  1. புறநானூறு , 164.