பக்கம்:குமண வள்ளல்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாள் தந்த வளம்

99

வுடன் விடை பெற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு, வாளை உறையில் போட்டு எடுத்துக் கொண்டு அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டார் சாத்தனார். அவர் ஏன் அப்படி விரைந்து போகிறார் என்பதைக் குமணனால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

சாத்தனார் முதிரத்துக்குப் போனார். இளங் குமணனைப் பார்க்க வேண்டுமென்று வாளை மறைத்துக்கொண்டு போனார். “அரசனிடம் மிகவும் இரகசியமான செய்தியைச் சொல்லவேண்டும்” என்று காவலரிடம் சொல்லி அரண்மனைக்குள் புகுந்தார். ஒரு காவலன் அவரை இளங் குமணனுக்கு முன் கொண்டு போய் நிறுத்தினான்.

“நீர் யார்? எங்கே வந்தீர்?” என்று கேட்டான் அரசன்.

புலவர் விடையொன்றும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த வாளை உறையோடு எடுத்தார். “இதைப் பாருங்கள்; இது யாருடையதென்று தெரிகிறதா?” என்று அதைக் காட்டிக் கேட்டார்.

இளங் குமணன் அதைக் கூர்ந்து நோக்கினான். குமணனுடைய வாள்! “அண்ணாவின் வாளா?” என்று கேட்டான்.

“ஆம்!” என்று புலவர் கூறக் கேட்டவுடனே அவன், “அவனைக் கொன்றுவிட்டீரா?” என்று கூவினான். அவன் உள்ளத்திற்குள் மறைந்திருந்த பாசம் வெடித்துக்கொண்டு கிளம்பியது. புலவர் சற்று வேடிக்கை பார்க்கவேண்டுமென்று பேசாமல் நின்றார்.

“என் அண்ணாவைக் கொன்று இதை எடுத்துக் கொண்டு வந்தீரா? ஐயோ தெய்வமே இப்படியா